அதிகரிக்கும் கொரோனா.. அலர்ட்டாக இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,743 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதில் 81 சதவீத தொற்று மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
டெல்லி: கொரோனா நோய்த்தொற்றை உடனடியாக மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு 7 ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று புதிதாக 9,743 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது மரபணு வரிசை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றை உடனடி மற்றும் திறம்பட கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் அதை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட உத்தியைப் பின்பற்றும் போது, சுகாதார அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் ராஜேஷ்பூஷன் உறுதி கூறியுள்ளார். கொரோனா நான்காவது அலை குறித்து அச்சமோ, பதற்றமோ அடையத்தேவையில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications