ரஷ்யா-உக்ரைன் போர்.. சுதந்திரமான விசாரணைக் குழு வேண்டுமா? UNHRC வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா..!
டெல்லி : ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி தொடர்பாக சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைப்பதற்கான ஐநா மனித உரிமை கவுன்சில் நடத்திய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைன் மீதான 9ஆம் நாள் போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நகரங்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.
ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனவும், ஆனாலும் போராடுவோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார்.

போர் உச்சகட்டம்
போர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது கூட உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய இரண்டாவது நகரை கைப்பற்றி விட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி விடுவோம் எனக் கூறியுள்ள ரஷ்யா, ஆயுதங்களை விட்டு வந்தால் உக்ரைனுடன் பொலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய அரசு கூறியது.

ஐநா வாக்கெடுப்பு
ஆனால் ரஷ்யாவின் இந்த அறிவிப்பை ஏற்க உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை குறித்த வரைவுத் தீர்மானம் குறித்து 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் கவுன்சில் வாக்கொடுப்ப்பு நடத்தியது.

இந்தியா புறக்கணிப்பு
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக, சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழுவை அவசரமாக நிறுவ முடிவு செய்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நாடுகளின் அனுமதி கோரியும் வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கவில்லை. 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் இந்த தீர்மானம் ஆதரவாக 32 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகளும் (ரஷ்யா மற்றும் எரித்திரியா) பதிவாகின. இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களிக்கவில்லை

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு
"உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவாக ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அவசரமாக நிறுவ மனித உரிமைகள் கவுன்சில் முடிவு செய்துள்ளது" என்று மனித உரிமைகள் கவுன்சில் ட்வீட் செய்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் தொடர்பான இரண்டு தீர்மானங்களிலும், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் ஒரு தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications