தமிழக ஆளுநர் ரவியை விடுங்க.. டெல்லியில் தீவிரமாக காய் நகர்த்தும் கேரள ஆளுநர்.. விஷயம் இதுதானா?
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, பதவிகாலத்தை நீட்டிக்க டெல்லியில் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநராவதற்கு கேரள மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆரிப் முகமது கான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படலாம்.

விரைவில் முடிவடையும் ஆளுநர் பதவிக்காலம்: இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது. அதேபோல் கேரள ஆளுநர் ஆரிப் முகமனு கானின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலுங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் நீட்டிப்பா?: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 15-ம் தே திடெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பதவி நீட்டிப்பு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
மத்திய உளவுத்துறையான IB-யில் அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.பி.எஸ் ரவி, 2019 ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில், தமிழக ஆளுநராக 2021-ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. தனது பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து அவர் டெல்லியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காய்நகர்த்தும் கேரள ஆளுநர்: அதேசமயம், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், தமிழ்நாடு ஆளுநராவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக அடிக்கடி சென்னை வந்து செல்கிறார். அதன் காரணமாக, தமிழ்நாடு ஆளுநராக தன்னை நியமித்தால் எளிதாக இருக்கும் என நினைக்கிறாராம்.
அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுவதாக இருந்தால், தமிழக ஆளுநர் பதவியை தனக்கு தரும்படி ஆரிப் முகமது கான் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் ஆரிப் முகமது கான், டெல்லி மேல்மட்டத்தில் நல்ல செல்வாக்கோடு இருப்பதால், அவரது குரல் டெல்லியில் வலுவானது எனக் கூறப்படுகிறது. இதனால், முகமது ஆரிப் கான் கோரிக்கையை ஏற்று அவர் தமிழக ஆளுநர் ஆக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆரிப் முகமது கான்: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஆளுநர் ஈடுபட்டார். இந்தியாவிலேயே ஆளுநர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது அதுவே முதல் முறை என்பதால் நாடு முழுவதும் அந்த விவகாரம் கவனம் பெற்றது. அதேபோல, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து விட்டு நினைவு தெரிந்த காலம் முதல் நான் ஆர்.எஸ்.எஸ் தான் என்று பரபரப்பை கிளப்பி இருந்தார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடங்கி மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டது வரை தொடர்ந்து கேரள அரசு - ஆளுநர் முகம்மது ஆரிப் கான் இடையேயான விரிசல் அனைவரும் அறிந்ததே. சட்டசபை கூட்டத் தொடரில் மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நொடிகளிலேயே உரையை முடித்துவிட்டு வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கேரளா மாநில அரசு பல வழக்குகளை தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சலசலப்பு: ஆளுநர் ஆர்.என். ரவியின் திமுக அரசுக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் அவரை திரும்பப்பெற வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரை விட மாநில அரசுக்கு அதிகம் குடைச்சல் கொடுக்கும் நபரான முகமது ஆரிப் கான், தமிழ்நாட்டில் ஆளுநராக விரும்புவதாக கூறப்படுவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை தமிழக ஆளுநராக மாற்றிவிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கேரள ஆளுநராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனல், 2026 வரை தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியே தொடரக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. வரும் நாட்களில் இந்த தகவல்களில் அப்டேட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications