கழற்றிவிடப்படும் கங்குலி.. பிசிசிஐயில் ஜெய்ஷாவுக்கு கூடும் “பவர்”! புதிய தலைவராக உலகக்கோப்பை வின்னர்
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைவராக பதவி வகித்து வரும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய தலைவரை நியமிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பல மதங்கள் இருந்தாலும் இந்தியாவில் பலரால் விரும்பப்படும் பொதுவான மதமாக இருப்பது கிரிக்கெட். விளையாட்டை கடந்து இதனை ஒரு உணர்வாகவே கோடிக்கணக்கான மக்கள் கருதுகின்றனர்.
எனவேதான் கிரிக்கெட் இந்தியாவில், பல்லாயிரம் கோடிகளில் புரளும் வியாபாரமாகவும் மாறி இருக்கிறது. இந்தியாவின் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் அணியின் வெற்றி தோல்வியை தங்களுடையதாக நினைத்து அதை வீரர்களிடம் பிரதிபலிக்கின்றனர்.

பிசிசிஐ
இப்படிப்பட்ட இந்த கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிசிசிஐ. இதன் தலைவராக கடந்த நவம்பர் மாதம் சவுரவ் கங்குலி பதவியேற்றார். செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய இருக்கிறது.

கங்குலி
2 வது முறையாக இவர்கள் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் ஜெய்ஷா செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், கங்குலி தலைவராக தொடர மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐசிசியில் கங்குலி வகித்த இந்திய பிரதிநிதிக்கான பொறுப்பும் ஜெய்ஷாவிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை
சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மும்பையிலும் கடந்த வாரம் டெல்லியிலும் அவர் ஆலோசித்து இருக்கிறார். எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

ஐபிஎல் தலைவர்
பிரிஜேஷ் பட்டேல் வகித்து வரும் ஐபிஎல் தலைவர் பதவியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரரும் பிசிசிஐ பொருளாளருமான அருண் சிங் தூமலுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அனுராக் தாக்கூர் இதற்கு முன் பிசிசிஐ தலைவராக பதவி வகித்தவர்.

பிசிசிஐ தலைவர்
பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவே தொடர்வார் என்று கூறப்படுகிறது. கங்குலி வகித்து வந்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னியை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் பந்துவீச்சாளராக இடம்பெற்றவர் ரோஜர் பின்னி.

யார் இந்த ரோஜர் பின்னி?
தோனி தலைமையிலான இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடிய ஸ்டூவர் பின்னியின் தந்தை இவர். கர்நாடகாவை சேர்ந்த ரோஜர் பின்னி கபில் தேவ் தலைமையிலான அணியில் மித வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். 67 வயதான ரோஜர் பின்னி வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் 36 வது பிசிசிஐ தலைவராக பதவியேற்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
