எளிமையாக பாஸ்போர்ட் பெற மத்திய அரசு சூப்பர் திட்டம்.. ஆவணங்கள் சமர்பிப்பதில் மாற்றம்
டெல்லி: புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள "பாஸ்போர்ட் சேவக் கேந்திரா" Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம்.
இது நாள் வரை பாஸ்போர்ட் எடுக்க ஆவணங்களை காகித வடிவில் சமர்பிக்க வேண்டியதிருந்தது. இப்போது டிஜிலாக்கருடன் பாஸ்போர்ட் சேவை இணைக்கப்ட்டுள்ளது. இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கலாம்.

டிஜிலாக்கர்
வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறைகளின் இணை அமைச்சர் முரளிதரன் இதுபற்றி கூறுகையில், "டிஜிலாக்கருடன் பாஸ்போர்ட் சேவை இணைக்கப்ட்டுள்ளது. இனி பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கலாம்.பாஸ்போர்ட் சேவா திட்டம் நாட்டில் பாஸ்போர்ட் சேவை வழங்குவதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஆவணங்கள்
கடந்த ஆறு ஆண்டுகளில் பாஸ்போர்ட் கொடுக்கும் நடைமுறையில் கடலளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது. பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் மூலம் ஏழு கோடிக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமை செய்துள்ளோம். வரும் நாட்களில் டிஜி லாக்கர் மூலமாக இ பாஸ்போர்ட் வழங்கவும் ஆலோசித்து வருகிறோம். மேலும் அனைத்து மக்களும் இந்த சேவையை பயன்படுத்தி டிஜி லாக்கர் உதவியுடன் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்" இவ்வாறு கூறினார்.

என்னென்ன பாஸ்போர்ட்
இதனிடையே உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறைளை இப்போது பார்ப்போம். நாட்டில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இரண்டு முறை
பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal). ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட் ஆவணங்கள்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்? முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

எவ்வளவு கட்டணம்
• புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் - சேதமடைந்தால் - 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் - Expired)
• காணாமல் போனால் - சேதமடைந்தால் - 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்த்து தர வேண்டும்.

புதிய பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் "Non Traceable" சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.