பாஜகவை மக்கள் நம்புகின்றனர்.. அவர்களுக்காக அடிமட்ட அளவில் மேயர்கள் பணியாற்ற வேண்டும்.. பிரதமர் மோடி
டெல்லி: குஜராத் தலைநகர் காந்திநகரில் தேசிய மேயர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, 'பாஜகவை மக்கள் நம்புகின்றனர் என்றும் அவர்களுக்காக அடிமட்ட அளவில் மேயர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் பங்கேற்கும் வகையில் தேசிய மேயர்கள் மாநாடு ஒன்றை குஜாரத் தலைநகர் காந்திநகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி இந்த மாநாட்டை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நகர கட்டமைப்புக்கு அதிக முதலீடு
இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நகர்புற வளர்ச்சி செயல்திட்டத்தை தயாரிப்பதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். நமது நாடு பாஜகவை நம்புகிறது. எனவே அடிமட்ட அளவில் இருந்து பணியற்றுவது அனைத்து மேயர்களின் பொறுப்பாகும். சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும். வளர்ச்சி என்பது நன்கு திட்டமிடப்படாக ஒன்றாக இருக்க வேண்டும். நகர கட்ட்டமைப்புக்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா முதலீடு செய்து வருகிறது.

மெட்ரோ நெட்வொர்க்
கடந்த 2014- ஆம் ஆண்டு நமது நாட்டில் மெட்ரோ நெட்வொர்க் வெறும் 250 கி.மீட்டர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், இன்று நாட்டின் மெட்ரோ நெட்வொர்க்கின் 775 கி.மீட்டருக்கும் மேலாக உள்ளது. ஆயிரம் கி.மீட்டராக இதை உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சேவைகள் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மேயர்களும் சப்கா சாத் , சப்கா விகாஸ் மற்றும் சப்கா பிரயாவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

சர்தார் வல்லபாய் பட்டேல் வழியை..
நகர்புற திட்டமிடலை நாம் வரைமுறப்படுத்த வேண்டும். தற்காலிக அணுகுமுறையில் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை முடிவுக்கு கொண்டு வர முடியும். சர்தார் வல்லபாய் படேல் தனது அரசியல் பயணத்தை ஒரு மேயராகத்தான் தொடங்கினார். சிறந்த இந்தியாவை உருவாக்கவும் நாட்டை மேம்படுத்தவும் அவரது வழியை நாம் பின்பற்ற வேண்டும்.

டிஜிட்டல் பேமெண்ட்
2 மற்றும் 3 ஆம் கட்ட நகரங்கள்தான் தற்போது பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகின்றன. எனவே, தொழிற்சாலை மையங்களை இந்த பகுதிகளில் மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் பேமேண்ட் முறையை பயன்படுத்த சிறிய வியாபாரிகள் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும். இதற்கான முயற்சியை மேற்கொள்வதை மேயர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள் பங்கேற்பு
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 121 மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதேபோல் இந்த மாநாட்டில் மகராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications