பயப்படாதீங்க.. என் தாய் கூட 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
டெல்லி: தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வானொலி உரையில் தெரிவித்துள்ளார். தனது தாய் விஷயத்தை இதில் உதாரணமாக காட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் உள்ள துலாரியா கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் லைவாக பேசினார். அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கிராமப்புறங்களில் தடுப்பூசி தயக்கத்தை அகற்ற இந்த உரையாடல் உதவும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

நரேந்திர மோடி மேலும் பேசுகையில், நான் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். எனது தாய்க்கு கிட்டத்தட்ட 100 வயது ஆகிறது. அவரும் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். எனவே தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையாக பரப்பப்படும் வதந்திகள் நீங்கள் நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்தந்த ஊர்களில் உள்ள பெண்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும். பயத்தைப் போக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்திற்கு நமது தாரக மந்திரம் "இந்தியா முதலில் (India First)" என்பதாக இருக்கவேண்டும்.
விரைவிலேயே டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வைரஸ் நோய் தொற்று காரணமாக தங்களது குடும்பத்தினரை பறிகொடுத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு உண்மையிலேயே நாம் அஞ்சலி செலுத்த விரும்பினால், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை பராமரிக்கவேண்டும், இதுதான் நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய கைமாறாக இருக்கக் கூடும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.
முன்னதாக தனது உரையை ஆரம்பிக்கும்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பறக்கும் சீக்கியர் என்று புகழப்பட்ட தடகள வீரர் மில்கா சிங் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்ததை, நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர்.












Click it and Unblock the Notifications