கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்; சிக்குகிறாரா டெல்லி அமைச்சர்?
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி பணம், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கடந்த மே. 30ஆம் தேதி டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சத்யேந்திர ஜெயினுக்கு, ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஹவாலா பணபரிவர்த்தனை
2015-16ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களில் பதியப்பட்டுள்ளன் நிறுவனங்களுக்கு போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 4.81 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அமைச்சர் கைது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால்
சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அவரது திட்டத்தை பார்க்க வந்துள்ளனர். அவருக்கு மத்திய அரசு விருது வழங்க வேண்டும். ஊழல் புகார் குறித்து ஏற்கனவே சிபிஐ விசாரித்து குற்றத்தை நிரூபிக்காமல் விடுவித்துள்ளது. இப்போது அமலாக்கத்துறையும் அதைதான் செய்யப்போகிறது. சத்யேந்திர ஜெயினின் கைது உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்தார்.

உறவினர்கள் வீடுகளில் சோதனை
இந்தநிலையில் நேற்று சத்யேந்திர ஜெயினுக்கு சொந்த வீடு, அலுவலகம், அவரது உறவினர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறையினர் திடீரென ரெய்டில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டு இரு வாரத்திற்கு பின் திடீரென அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. இது வழக்கு தொடர்பான சோதனை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

பணம், தங்கம் பறிமுதல்
இதனைத்தொடர்ந்து இன்று சத்யேந்திர ஜெயின் தொடர்பான இடங்களில் இருந்து ரூ.2.82 கோடி பணம், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது. இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications