கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு கொடுக்கும் முன் 3வது அலையே முடிந்து விடும் - சுப்ரீம் கோர்ட் கண்டனம்
கோவிட் -19 காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குள் மூன்றாவது அலையே முடிந்து விடும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இழப்பீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரின் முன்பு விசாரிக்கப்படு வந்தன.

முதற்கட்ட விசாரணையின்போது, இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மாதிரியான கொள்கை ஏதும் வகுக்கப்பட்டுள்ளதா?" என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டிலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முறையான ஆவணம் அல்லது இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான ஒரே மாதிரியான கொள்கை இல்லையெனில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எந்த இழப்பீட்டையும் பெற முடியாமல் போய்விடும். எனவே, கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சீரான கொள்கை குறித்தும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி நிவாரணம் வழங்குவது குறித்தும் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில்,தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 ஐப் பொறுத்தவரையில் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நிவாரண நிதி வழங்கலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று தெரிவித்திருந்தது.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் உள்ள நிதியைவிடக் கூடுதலான நிதி தேவைப்படும். அரசின் வரி வருவாய் குறைந்து, மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், கொரோனாவால் மரணமடைந்த எல்லோருக்கும் நிவாரணம் வழங்கினால் மற்ற நடவடிக்கைகளுக்கு நிதி இல்லாத சூழல் உருவாகும். ஆகையால் இந்தக் கோரிக்கை மாநில அரசுகளின் நிதிநிலைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. எனவே லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க இயலாது என்று தெரிவித்திருந்தது.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்து மத்திய அரசும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து ஆறு வாரக் காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
கொரோனாவுக்கு பலியானவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம், நாள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிடுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோவிட் -19 இறப்புகளுக்கான இழப்பீட்டு விதிமுறைகளை உருவாக்க மேலும் நான்கு வாரங்கள் மத்திய அரசுக்கு வழங்கியது.
இதனிடையே இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மீதும் கடும் அதிருப்தியை நீதிபதிகள் வெளிப்படுத்தினர். மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் முன்பு கோவிட் -19 மூன்றாவது அலையே முடிந்து விடும் என்று தெரிவித்தனர். இறப்பு சான்றிதழ், இழப்பீடு போன்றவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க நீண்ட காலத்திற்கு முன்பே உத்தரவிடப்பட்டதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவிட் -19 வழக்குகளில் இறப்பு சான்றிதழ் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடுமாறு நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது. செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications