"மாலத்தீவு" போனால் என்ன.. மினிகாய், மொரிஷியஸ் என 2 இடங்களில் பிளான் Bஐ இறக்கிய இந்தியா! அதிரடி
டெல்லி: இந்தியா மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன்னை வலுப்படுத்தி இந்தியா வேறு இரண்டு இடங்களில் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. ஆனால், ஆட்சி மாறியதும் எல்லாம் மாறியது. புதிய அதிபர் முய்ஸு இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்.

இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதற்கிடையே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன்னை வலுப்படுத்திய இந்தியா வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மினிகாய் தீவு: அதன்படி லட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற கடற்படைப் பிரிவை இந்தியா தொடங்க உள்ளது. இந்த புதிய தளம் என்பது மாலத்தீவுகளில் இருந்து வெறும் 50 மைல் தொலைவில் இருக்கும். இது இந்தியப் பெருங்கடலில் ராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகளை முன்பு இருந்ததை போலவே கண்காணிக்கும் வழியை இந்தியாவுக்குத் தரும். இன்னும் சில நாட்களில் அதாவது மார்ச் 6ஆம் தேதி இது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த புதிய ராணுவ தளம் என்பது ஒன்றும் மாலத்தீவில் இருந்ததை போல நிரந்தர ஏர்போஸ் இல்லை.. இந்த ஐஎன்எஸ் ஜடாயு என்பது நமது ராணுவ கப்பல் தான். இதைத் தான் இப்போது லட்சத்தீவில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. லட்சத்தீவு இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு தீவு பகுதி என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎன்எஸ் ஜடாயு போர்க்கப்பலில் இருந்து அங்கே உள்ள நடமாட்டங்களை இந்தியா தொடர்ந்து கண்காணிக்கும்.
மொரிஷியஸ்: அதேபோல இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருக்கும் மற்றொரு தீவு நாடான மொரிஷியஸ் பக்கமும் இந்தியா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மொரீஷியஸ் நாட்டில் இருந்த விமான தளம் அப்கிரேட் செய்யப்பட்டு, அதைப் பிரதமர் மோடி, மொரீஷியஸ் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார். இது இந்தியப் பெருங்கடலில் நடக்கும் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும்.
கடந்த 2015ஆம் ஆண்டு மோடி மொரிஷியஸ் சென்றிருந்த நிலையில், அப்போது தான் இந்த விமான தளத்தை அப்கிரேட் செய்ய முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2003 முதலே இந்த விமான தளத்தை அகிரேட் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், மோடியின் பயணத்திற்குப் பிறகு அது வேகமெடுத்தது. இது தொடர்பான கட்டுமானம் முடிந்த பிறகே இரு நாட்டுத் தலைவர்கள் இணைந்து இந்த மேம்பாலத்தைத் திறந்து வைத்துள்ளனர்.
மாலத்தீவு: இந்த மேம்படுத்தப்பட்ட விமான தளம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமின்றி ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளின் வளர்ச்சிக்கும் இது உதவும். மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்குப் பதிலடியாக இது இருக்கும்.
மொரிஷியஸின் வடக்கு அகலேகா தீவில் தான் இந்த விமான தளம் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. அங்கே ஏற்கனவே இருந்த விமான தளத்தில் இந்தியக் கடற்படையின் டோர்னியர் ரக விமானங்களை மட்டுமே ஆப்ரேட் செய்ய முடிந்தது. ஆனால் இப்போது மேம்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தின் மூலம் பெரிய P8I கடல்சார் உளவு விமானத்தையும் கூட இந்தியாவில் அங்கிருந்து இயக்க முடியும். இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இந்தியாவால் கண்காணிக்க முடியும்.
மாலத்தீவில் இந்தியாவுக்கு நீண்ட காலமாக இருந்த ராணுவ இருப்பு இல்லாமல் போன நிலையில், அதற்குப் பதிலாக இப்படி இரு இடங்களில் ராணுவ தளத்தை அமைத்துள்ளது இந்தியா.. இது ராணுவ ரீதியாக இந்தியாவுக்கு பெரும் பலனைத் தரும். இது மட்டுமின்றி இந்தியப் பெருங்கடலில் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில், அதைக் கண்காணிக்கவும் இது உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications