அஸ்வின் முதல் மதுரை வேலு ஆசான் வரை.. தமிழ்நாட்டில் இருந்து 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது.. முழு விவரம்
டெல்லி: குடியரசு தினத்திற்கு முதல் நாளான இன்று பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தினத்திற்கு முதல் நாளான இன்று மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது. இலக்கியம், விளையாட்டு, பத்திரிகை, மருத்துவம், தொழில், வர்த்தகம் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியைச் சேர்ந்த பெண் மருத்துவர் நீர்ஜா பட்லா, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிமன் ஷர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 15 வயது முதல் நாடு முழுவதும் 15 ஆயிரம் தவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞரான பி.தட்சணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற ஹரியானாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்குற்கும், சமூக பணிகளுக்காக பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பீம் சிங், பிரேசிலைச் சேர்ந்த ஜோனஸ் மசெட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிக்கிமைச் சேர்ந்த நரேன் குரங், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரான ஜக்தீஷ் ஜோஷிலாவுக்கும், பக்தி பாடகர் பெரு சிங் செளஹானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான ஷைகா ஏ ஜே அல் ஷாபா-வுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கும், சூற்றுச்சூழல் ஆர்வலர் சைத்ராம் தேவ்சந்த் பவார், புற்றுநோயியல் நிபுணரான விஜயலட்சுமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், தினமலர் பத்திரிகையின் இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன் மற்றும் வேலு ஆசான் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications