நிலுவையில் 5 கோடி வழக்குகள்.. கேட்கவே அதிர்ச்சியா இருக்கு! கொந்தளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
டெல்லி: நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் விரைவில் 5 கோடியை எட்டிவிடும் என்றும், நீதித்துறையின் உள்கட்டமைப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவு பிரமாதமாக இல்லை எனவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
ஏற்கெனவே நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தற்போது நீதித்துறை உள்கட்டமைப்புகு குறித்து விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு, நேற்று அவை பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கிரண் ரிஜிஜூ இவ்வாறு கூறியுள்ளார்.

உள்கட்டமைப்பு
அவர் மேலும் பேசியதாவது, "உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலுவை வழக்குகள் எண்ணிக்கை விரைவில் குறையும் என்று நினைக்கிறேன். ஆனால், இதில் உண்மையான சவால் என்பது கீழமை நீதிமன்றங்களில்தான் இருக்கிறது. இந்த நீதிமன்றங்களில் உள்ள உள்கட்டமைப்புகள் கவனத்திற்குரியது. இதனை மேம்படுத்துவது எங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. நாட்டில் நீதித்துறையின் உள்கட்டமைப்பு பாராட்டத்தக்க அளவில் இல்லையென்பது அனைவருக்கும் தெரியும். கீழமை நீதிமன்றங்களை விடுங்கள், உச்சநீதிமன்றத்திலே உள்கட்டமைப்பு வசதி பெரிய அளவில் இல்லையே. இங்கு தலைமை நீதிபதி, சில மூத்த நீதிபதிகளை தவிர மீதமுள்ள நீதிபதிகளின் அறைகள் மிக சிறியதாகதான் இருக்கிறது.

மாநில அரசுகள் பொறுப்பு
நம்முடைய நீதிபதிகளுக்கான தேவையை நாம்தான் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆனால் உயர்நீதிமன்ற விவகாரத்தை மாநில அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த மாற்றங்கள் விரைவில் நடக்க வேண்டும். நான் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்றிருக்கிறேன். சில நீதிமன்றங்களால் ஈர்க்கப்பட்டுள்ளேன். சில நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்து நான் அவமானமடைந்துள்ளேன். ஏனெனில் சில இடங்களில் அது மோசமானதாக இருக்கிறது. கடந்த மாதம் நான் காஷ்மீரில் உள்ள பஹல்காமுக்கு சென்றிருந்தேன். அங்கு அழகான நீதிமன்றம் கட்டப்பட்டு வந்ததை ரசித்தேன்.

நிலுவை வழக்குகள்
இதுபோலதான் அனைத்து நீதிமன்றங்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதாவது, நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் நுழைந்துவிட்டால் அவர்களுக்கு வளாகம் அமைதியை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். இவற்றை நான் சாதாரண மக்கள் கோணத்திலிருந்து பார்க்கிறேன். நீதித்துறை என்பது சுவாரஸ்யமாகவும், மக்களுடன் நட்பானதாகவும் இருக்க வேண்டும். இதைதான் நாங்கள் விரும்புகிறோம். அதேபோல, எதிர்காலத்தில் இந்திய நீதித்துறை என்பது காகிதமற்றதாக மாறிவிடும். வழக்கறிஞர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நீதித்துறை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகப்போகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாத்தியமானாலும் கூட நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 கோடியாக இருக்கிறது. அல்லது விரைவில் 5 கோடியை எட்ட இருக்கிறது. எனவே இதனை தீர்க்க நீதிபதிகள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சர்ச்சை
முன்னதாக நீதிபதிகள் நியமனம் குறித்து அவர் பேசியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர்தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications