"வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கு நிகரான மரியாதை கொடுக்கனும்" -மத்திய உள்துறை அமைச்சகம்
டெல்லி: வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கு நிகரான மரியாதையை இந்திய குடிமக்கள் கொடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ஜனகன மண பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், தேசிய பாடலாக வந்தே மாதரம் பாடல் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதனை அறிவித்தார்.

தேசிய கீதம்
தேசிய கீதமான ஜனகன மண பாடலை பாடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 52 நொடிகளுக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும் போது அசையாமல் நிற்க வேண்டும் என்பன போன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை மீறுவது சட்டப்படி குற்றமாகவும் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு இத்தகைய விதிகள் வகுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், தேசிய கீதத்தை போல தேசிய பாடலுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனக்கோரி பாஜகவை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான அஷ்வினி உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய கீதத்திற்கு நிகரான மரியாதையை
அதில், தேசிய கீதத்திற்கு நிகரான மரியாதையை தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் குடிமகன்கள் கொடுக்கப்பட வேண்டும். தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் என இரண்டிற்குமே தனித்த புனிதத்தன்மை கொண்டது. எனவே இந்த இரண்டு பாடலும் சமமான மரியாதை தரப்படவேண்டும். எனினும், இந்த விவகாரத்தை ரிட் மனுவின் கீழ் கொண்டு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்று..
வந்தே மாதரம் பாடல் தொடர்பான முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்பு முன்வைக்கப்பட்டதாகவும் எனினும், அரசியல் அமைப்பில் தேசிய பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால் இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், வந்தே மாதரம் பாடலை படுவதற்கும் இசைப்பதற்கும் வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்து இருப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை
மேலும் தேசிய கீதம் பாடுவதை தடுப்பது அல்லது இடையூறு செய்வது தேசிய பெருமை சட்டம் 1971-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் இதுபோன்ற எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications