சீனா - இந்தியா தொடர் மோதல்களுக்கு என்ன காரணம்? 1993-1996 எல்லை ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன? பின்னணி
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் செக்டரில் கடந்த 9ம் தேதி சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர். இந்நிலையில் இந்த மோதலுக்கு 1993-96 எல்லை ஒப்பந்தம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது
ஏற்கெனவே கால்வான் பள்ளத்தாக்கில் மோதல், இதை தொடர்ந்து இப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் மோதல் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
இது போன்ற மோதலில் சீனா ஏன் ஈடுபட்டுள்ளது என்பதை முன்னாள் ராணுவ அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அதாவது இந்தியா-சீனா இருநாடுகளும் 1993-1996 எல்லை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

காரணம்
சமீபத்தில் அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்குகள் நீடித்து வந்துள்ள நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டது சீனாவுக்கு எரிச்சலை கிளப்பி இருக்கலாம் என்றும், இதனால்தான் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்றிருக்கிறது என்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1962 போர்
கடந்த 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இந்தோ-சீன போர் நடைபெற்றது. இதற்கான முக்கிய காரணம் 1959ம் ஆண்டில் சீனா மேற்கொண்ட நிலைப்பாடுதான்(1959 cartographic line). இந்த நிலைப்பாட்டின்படி 1597 கி.மீ பரப்பளவு கொண்ட இடத்தை சீனா உரிமை கோருகிறது. அதாவது லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு வரை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதன் காரணமாகதான் கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு தரப்பினரும் வெளியேறினர்.

ஒப்பந்தம்
அதன் பின்னர் தற்போது நடைபெற்ற மோதல் 1993-96 ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எல்லைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்தும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு LAC என்று வரையறுக்கப்பட்டது. இதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது என்றும், இந்த பகுதியில் இருநாட்டின் வீரர்களும் குவிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவ்வாறு குவிக்கப்பட்டாலும் எவ்விதமான ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் ஒப்பந்தம் கூறியிருந்தது.

அமெரிக்கா
இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் இரு தரப்பினரின் கலந்தாலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பாதுகாப்பு தொடர்பான மூன்றாம் நபர் அத்துமீறல்கள் தொடர்பான தகவல்களும் இரு தரப்பிலும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரு நாட்டின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இப்படியான நிலையில் அமெரிக்காவுடன் அருணாச்சலப் பிரதேசத்தில் பயிற்சியை மேற்கொண்டிருப்பது என்பது சீனாவுக்கு நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால்தான் சீனா தரப்பில் கடந்த நவம்பர் 30ம் தேதி இந்தியாவிடம் இந்த 1993-96 ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications