'ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது, ஆனால்..' ஆய்வாளர்கள் கொடுக்கும் அதிமுக்கிய தகவல்
டெல்லி: புதிதாகக் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு, உலகெங்கும் பெரும் அச்சத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது எந்தளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாதம் முதலில் புதிய உருமாறிய கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனாவை, உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்த உருமாறிய கொரோனா டெல்டாவை காட்டிலும் 3 மடங்கு வரை வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

ஆய்வுகள்
பொது இடங்களில் மாஸ்க் அணிந்து, கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியுமே ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா குறித்து நடத்தப்பட்ட முக்கிய சோதனையில் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஓமிக்ரான் முந்தைய வகைகளைக் காட்டிலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் கொரோனா
உலகெங்கும் ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், இது மிக முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. தற்போது வரை, ஓமிக்ரான் நோயின் தீவிரம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த புதிய ஆய்வுகள், ஒமிக்ரான் கொரோனாவின் சில குறிப்பிட்ட மாறுபாடுகளில் டெல்டாவை விடக் குறைவான ஆபத்தானவை என்று குறிப்பிடுகின்றன. மேலும், உலகெங்கும் அதிக நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதால் அடுத்த அலை ஏற்படும் போது நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறையும்.

பாதிப்பு குறைவு
ஓமிக்ரான் கொரோனா முந்தை பாதிப்பில் இருந்து ஏற்படும் ஆன்டிபாடிகளில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் நமது உடலின் ஆன்டிபாடிகள் அதைத் தடுத்துவிடும் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் ஆப்பிரிக்க ஆய்வில் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 70% குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஸ்காட்லாந்து ஆய்வில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் இரண்டு பங்கு குறைவதாகக் கூறப்பட்டுள்ளது.

எங்கே அதிகம்
அதேநேரம் பிரிட்டன் ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் 15% -20% வரை மட்டுமே குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது முதற்கட்ட ஆய்வுகள் மட்டுமே என்றும் வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக எளிதாக பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்கள் மத்தியில் இது அதிகம் ஏற்படும்.

பூஸ்டர் டோஸ்
தற்போதைய சூழலில் ஓமிக்ரானுக்கு எதிரான முக்கிய ஆயுதமாகத் தடுப்பூசி தான் பார்க்கப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசியே ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்றாலும் கூட உலகின் பல்வேறு நாடுகளும் பூஸ்டர் டோஸ் பணிகளைத் தொடங்கிவிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை வரும் ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்கள். 60 வயதைத் தாண்டியவர்களுக்கு. இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 60% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினும் 41% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள் என்ன
முந்தைய வகையை கொரோனா ஏற்படுத்திய அறிகுறிகளையே ஓமிக்ரான் பாதிப்பும் ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் தசை வலி, முதுகு வலி அல்லது தொண்டை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. அதேநேரம் முந்தைய கொரோனா பாதிப்புகளில் சுவை மற்றும் வாசனை இழப்புகள் அதிகம் ஏற்பட்ட நிலையில், ஓமிக்ரான் கொரோனாவால் அது அதிகம் ஏற்படுவதில்லை. ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்படும் போது தலைவலி, சைனஸ் அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி போடாதவர்கள் மூச்சுத் திணறல், இருமல் அதிகம் ஏற்படுகிறது.

விரைவில் குறையும்
முதலில் ஓமிக்ரான் கொரோனா மிக மோசமான அலையை ஏற்படுத்தக் கூடும் என்றே உலக நாடுகள் அஞ்சின. இருப்பினும், தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு ஏற்கனவே உச்சமடைந்து, குறையத் தொடங்கிவிட்டது. உலகின் பிற நாடுகளிலும் இதேபோல சீக்கிரம் ஓமிக்ரான் அலை குறையத் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications