விதிமீறல் இல்லை.. குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்காதது ஏன்? இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
டெல்லி: குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் தற்போது இமாச்சல் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்துக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இதில் விதிமீறல் இல்லை எனக்கூறி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் சில மாநிலங்களுக்கும் எப்போதும் ஒருசேர சட்டசபை தேர்தல் நடக்கும். அதன்படி தான் குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு காலம் காலமாக ஒன்றாக தேர்தல் நடத்தப்பட்டு வுருகிறது.
இந்த 2 மாநில சட்டசபையின் காலமும் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் குஜராத், இமாச்சல் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

இமாச்சல் பிரதேச தேர்தல்
அதன்படி இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி நவம்பர் 12ல் இமாச்சல் பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த வேளையில் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

காரணம் என்ன?
குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்காதது பற்றி கேட்டதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்தார். அதன்படி, "இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்தல் விதிகள்படி ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

விரைவில் அறிவிப்பு
மேலும் வானிலை போன்ற பல காரணங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் இமாச்சல பிரதேச மாநில தேர்தலை நடத்த விரும்புகிறோம். இமாச்சல பிரதேசத்தில் 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்கள் மட்டுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. '' என்றார்.

இனி என்ன நடக்கலாம்?
தற்போதைய சூழலில் குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. இமாச்சல் பிரதேசத்துக்கு நவம்பர் 12ல் தேர்தல் நடந்தாலும் டிசம்பர் 8 ல் தான் ஓட்டு எண்ணப்பட உள்ளது. ஏறக்குறைய தேர்தல் முடிவுகள் வெளியாக ஏறக்குறைய ஒருமாத கால அளவு உள்ளது. இதனால் குஜராத் சட்டசபை தேர்தல் தேதியையும் இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் எனவும், அதன்படி குஜராத்திலும் தேர்தலை நடத்தி இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கையான டிசம்பர் 8 உடன் சேர்த்து எண்ணலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

கடந்த முறை நடந்தது என்ன?
ஏனென்றால் இதற்கு முன்பு கடந்த 2017ல் இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications