ஒ.செ.க்களுக்கு வலைவீசும் ஓபிஎஸ் & கோ! எடப்பாடியோ அமைதியோ அமைதி! என்ன தான் நடக்கிறது அதிமுகவில்?
திண்டுக்கல் : எடப்பாடி தரப்பிலிருந்து ஓபிஎஸ் அணியில் இணைந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் பக்கம் வந்து விடுமாறு எடப்பாடி தரப்பு நிர்வாகிகளுக்கு வலை வீசி வரும் நிலையில் ஆனால் எதுவுமே நடக்காதது போல திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் அமைதி காப்பது கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தற்போது அதிமுக ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியானது ஓபிஎஸ் தரப்பால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு ஓரளவு பலனும் கிடைத்திருக்கும் நிலையில், ஓரளவு ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்திருக்கும் நிலையில் அவர்களை வைத்தே மேலும் பலரை இழுக்க தீவிரம் காட்டுகின்றனர் நிர்வாகிகள்.

ஆதரவு நிர்வாகிகள்
குறிப்பாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அவர் தரப்புக்கு ஆதரவு திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன், ராமநாதபுரம் தர்மர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தங்கள் தரப்பிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு பலம் கூட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியில் இணைந்திருக்கும் ஒன்றிய செயலாளர்களும் தங்களுக்கும் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் அதிக நிர்வாகிகளை அழைத்து வர ஆர்வம் காட்டுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சியின் மூத்த மற்றும் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு தரப்பினரும் அரசியலில் எதிரும் புதிருமாய் இருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமிக்காக இருவரும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி பழனி வந்த போது இருவரும் சேர்ந்தே பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஆர்வம் காட்டவில்லை
ஆனால் அதில் காட்டிய ஆர்வத்தை நிர்வாகிகளை தக்கவைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். உள்ளூர் அதிமுகவினர். மற்ற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் தினமும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேசி வரும் நிலையில் திண்டுக்கல்லில் இருவருமே ஒ.செ.க்களை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் நிர்வாகிகள் தாவிவிட்ட நிலையில், மேலும் பலர் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
திண்டுக்கல் மாவட்டம் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்டமாக இருந்த நிலை மாறி தற்போது இரு ஒன்றிய செயலாளர் இபிஎஸ் தரப்புக்கு மாறி உள்ளனர். தொடர்ந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓபிஎஸ் தரப்புக்கு சென்ற நிலையில் தற்போது மேலும் சில நிர்வாகிகளை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் பசும்பொன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர்.

அமைதியோ அமைதி
இதுகுறித்து அவர்கள் தரப்பில் கேட்டபோது திண்டுக்கல் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வர தயாராகவே இருப்பதாகவும் பல நிர்வாகிகளுடன் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். விரைவில் அவர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என கூறினர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்அணி மாறும் நபர்களை தடுக்க முடியாமல் திண்டுக்கல் மாவட்ட மூத்த முன்னாள் அமைச்சர்களான எடப்பாடி தரப்பைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் அமைதி காத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
