அடி தூள்.. தோனி ஹேப்பி நியூஸ்: சென்னைக்காக அடுத்த சீசனிலும் ஆடுகிறார்! சேப்பாக்கத்தில்தான் ஃபேர்வெல்
துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது பிரிவு உபச்சார போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடக்கும் என்று தோனி உறுதியளித்து இருப்பதன் மூலம் 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசன் தோனி சென்னையில் விளையாட போவது உறுதியாகி உள்ளது.
Recommended Video
தோனி கடந்த ஐபிஎல் சீசன் மற்றும் நடப்பு சீசனில் சரிவர பேட்டிங் செய்ய முடியாமல் திணறி வருவதைப் பார்க்க முடிகிறது. அதிலும், நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி கிட்டத்தட்ட டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல விளையாடிக் கொண்டிருக்கிறார்.
டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வி அடைவதற்கு தோனியின் மெதுவான பேட்டிங் ஒரு காரணம் என்று சென்னை ரசிகர்களே கூ குமுறி வருகின்றனர்.

கேப்டனாக தோனி அபாரம்
அதேநேரம் தனது பேட்டிங் திறமையை குறைந்ததன் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் உடன் தோனி ஓய்வு பெற்று விடுவாரோ என்ற கலக்கமும் சென்னை ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் தோனி. அவர் இந்த அணியில் இருப்பதால்தான் மற்ற டீம்களை விடவும் சென்னை விரைவாக அதிக புகழை சம்பாதிக்க முடிந்தது. நாடு முழுக்க அதிக ரசிகர்களை.. அல்ல அல்ல.. ஆதரவாளர்களையும் பெற்றது.

தோனி இடத்திற்கு யார்
பேட்டிங் சொதப்பினாலும் கூட அவரது தலைமை பண்பு மற்றும் அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பாக இருப்பதால் சென்னை அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக ஆடி வருகிறது . ஒருவேளை அவர் ஓய்வு பெற்று விட்டால் அந்த இடத்துக்கு யார் வருவார்கள் அவர் வந்தாலும் தோனி செயல்பட்ட மாதிரி செயல்பட முடியுமா என்ற சந்தேகங்கள் சென்னை ரசிகர்களுக்கு இருக்கின்றன. எனவே கூடிய அளவுக்கு அதிகமாக விளையாட்டுகளில் ஆட வேண்டும் என்பது ரசிகர்கள் எண்ணம்.

மகிழ்ச்சி அறிவிப்பு
தற்போது தோனி அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக இருக்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் இன் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் நேற்று தோனி கலந்துரையாடினார் . அப்போது ஓய்வு பெறும் முடிவு குறித்து கேள்வி எழுந்தது.

சேப்பாக்கத்தில்தான் கடைசி ஆட்டம்
நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம், சென்னைக்கு நாங்கள் மீண்டும் வருவோம், எனது பிரிவு உபச்சார ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறும், அப்போது ரசிகர்களையும் நான் சந்திப்பேன். இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறையும்
கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் அதிவேகமாக நடைபெற்ற தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே 2022ம் ஆண்டு கோடைகாலத்தில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தாய்நாட்டில் வைத்து நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது. அதை மனதில் வைத்துதான் சென்னையில் வைத்து ஓய்வு பெறுவேன் என்று கூறியுள்ளார் தோனி. எனவே, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு அவர் தலைமை வகிப்பார் என்பது உறுதியாகி உள்ளது .

சொன்னபடி நடக்கும்
இப்படித்தான் 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனியிடம் இதுதான் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமா என்று வர்ணனையாளர் கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அதே போல நடப்பு சீசனில் அவர் ஆடிக்கொண்டு இருக்கிறார். எனவே அடுத்த சீசனில் தோனி கண்டிப்பாக விளையாடுவார் என்பது உறுதியாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications