உங்களின் அதிகாரப்போக்கு தொடர்ந்தால்...! மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை.. ஏன் என்னாச்சு?
ஹைதராபாத்: ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தில் விளையக்கூடிய விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திலும் மத்திய அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் 55.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 32.66 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு 78 சதவீத பயிர்களை மத்திய அரசு கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு 59 சதவீதம் அளவில்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் சந்திரசேகர் ராவ் போராட்டம்
இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தி உள்ளார். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல் கொள்முதலில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானா அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் நாடகம்
அப்போது நிருபர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ் கூறியதாவது:- நெல் பயிரிடுங்கள் என்று பா.ஜ.க கூறுகிறது, ஆனால் மத்திய அரசு அதனை வாங்கவில்லை. அரசியல் நாடகம் ஆடுகிறார்கள். நீங்கள் வாங்கவில்லை என்றால் நாங்கள் வந்து பாஜக அலுவலகத்தில் நெல்லை கொட்டிவிடுவோம். கடந்த ஆண்டு, பருவமழை காலத்தில் விளைந்த 78 சதவீத பயிர்களை மத்திய அரசு கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இது 59 சதவீதமாக தான் உள்ளது.

எந்த பதிலும் வரவில்லை
மாநிலத்தில் 55.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 32.66 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான இலக்கை நிர்ணயம் செய்யுமாறு உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

பதவிகளை தூக்கி எறிந்தவர்கள்
50 நாட்களாக அவர்கள் எங்களின் கோரிக்கைகளை புறக்கணித்தனர். கடந்த காலங்களில் தெலுங்கானா போராட்டத்தின் போது பதவிகளை தூக்கி எறிந்தவர்கள் நாங்கள். மாநிலத்துக்கு பிரச்சினை வந்தால் எந்த போராட்டமும் நடத்துவோம். மத்திய அரசின் கொள்கைகளால் விவசாய சமூகம் பாதிக்கப்படலாம் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினோம்.. உங்கள்(மத்திய அரசு) அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள், விவசாயிகளைக் காப்பாற்ற வாருங்கள், எதேச்சதிகார விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள், விவசாய பம்ப் செட்டுகளில் மீட்டர் பொருத்தும் கொள்கையை மாற்றுங்கள் என்று சொல்கிறோம்.

பிரதமர் மோடியின் செயல்
இந்த யுத்தம் இன்றுடன் முடிவடையப்போவதில்லை. மத்திய அரசின் அதிகாரப்போக்கு தொடர்ந்தால் இது தொடரும். 2006-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி அப்போதைய மத்திய அரசின் கொள்முதலுக்கு எதிராக 51 மணி நேரம் போராட்டம் நடத்தினார். ஆனால் இப்போது வேறு மாதிரி இருக்கிறார்கள். முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் இருக்க வேண்டிய பரிதாபமான சூழல் இந்த நாட்டில் நிலவுகிறது. இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார்.












Click it and Unblock the Notifications