காற்றில் பறந்த புரோடோகால்.. கடுங்கோபத்தில் ஆளுநர் தமிழிசை.. மத்திய அரசுக்கு பறந்த முக்கிய ரிப்போர்ட்
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை மாநில அரசு அதிகாரிகள் புறக்கணிப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஆளுநர் தமிழிசை சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். புதுச்சேரிக்கும் துணை நிலை ஆளுநராக உள்ளதால், இரு மாநிலங்களுக்கும் இடையே அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறார்.
இதனிடையே தெலங்கானா அரசுடன் உடன் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மோதல் இருப்பதாகத் தகவல் வெளியானது. கடந்த முறை தெலங்கானா சட்டசபை கூடியபோது கூட, ஆளுநர் உரை இல்லாமல் தான் தொடங்கியது.

ஆளுநர் தமிழிசை
தெலங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநர் தமிழிசை இப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பத்ராசலம் சென்றபோது ஆளுநர் தமிழிசையை வரவேற்பதில் சில குடிமைப் பணி அதிகாரிகள் புரோடோகாலை மீறியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து ஆளுநர் தமிழிசை மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

புரோடோகால் மீறல்
மாநிலத்தில் ஆளுநர் பயணத்தின் போது, புரோடோகாலை மீறியதற்காகக் குடிமைப் பணி அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று ஆளுநரிடம் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார். அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

நடந்தது என்ன
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தெலங்கானாவில் புரோடோகால் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது. குறிப்பாக நான் ராமர் முடிசூட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பத்ராசலம் சென்றிருந்தபோது ஏகப்பட்ட புரோடோகால் மீறப்பட்டது. ரயில் மூலம் நான் பத்ராசலம் சென்று இருந்தேன். அங்கு என்னை வரவேற்க வெறும் ஓரிரு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். முதல் நாளில் நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டதால், அதிகாரிகள் வந்தனர். ஆனால் இரண்டாவது நாளில் அதிகாரிகள் முற்றிலும் புறக்கணித்தனர்" என்றார்.

திமுக பாணி
தமிழ்நாட்டில் ஆளுநர் நிகழ்ச்சிகளை திமுக புறக்கணித்ததைப் போல தெலங்கானா அரசு நடந்து கொள்கிறதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆளுநர் தமிழிசை, "தமிழகத்தில் திமுக எடுத்துள்ளது கொள்கை ரீதியான முடிவு. ஆனால், தெலங்கானாவில் நிலைமை வேறு. தெலங்கானாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த மத்திய அரசுக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமர்ப்பித்து வருகிறேன். அதில் புரோடோகால் மீறல்கள் பற்றிய தகவல்களும் உள்ளது" என்றார்,

குடியரசுத் தலைவர் ரேஸ்
அதேபோல இந்த ஆண்டு நடைபெறும் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். மேலும், தெலங்கானாவில் நெல் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி அளித்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications