For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: சாதி மோதலால் அகதிகளான 24 தலித் குடும்பங்கள் #GroundReport

By BBC News தமிழ்
|

24 தலித் குடும்பங்கள் லாத்தூரிலிருந்து ருத்ரவாடிக்கு இடம் பெயர்ந்தது ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ளது ருத்ரவாடி கிராமம். இந்த கிராமம் அண்மையில் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்திற்கும் உள்ளானது. இந்த கிராமத்தில் வசித்த 24 தலித் குடும்பங்களும் வீட்டை காலி செய்திகொண்டு வெளியேறியதுதான் இதற்கு காரணம்.

உயர் இனத்தவராக கூறப்பட்ட மராத்தா இனத்தவருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மாதங் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவுக்கு அடுத்து இந்த குடும்பங்கள் ஊரை காலி செய்தன. இந்த குடும்பங்கள் அனைத்தும் உத்கிர் அருகிலுள்ள மலைப்பகுதியில் பாழடைந்த கட்டடத்தில் வசித்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலைக்கு அம்மக்களை தள்ளியது எது...

இந்த உண்மையை கண்டறிய பிபிசி மராத்தி களமிறங்கியது. பிரச்னைக்குரிய ருத்ரவாடி கிராமத்திற்கு சென்று பார்த்ததுடன் அங்கிருந்து வெளியேறிய குடும்பங்களையும் சந்தித்தோம்.

அவுரங்காபாத்திலிருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்கிரை அடைந்தோம். உத்கிர் வட்டத்தில் உள்ளது ருத்ரவாடி. 1200 பேர் வசிக்கும் ஒரு கிராமம் இது. இவ்விவகாரத்தில் நமக்கு தகவல் அளித்துவந்த நபர் இச்சாபூர்த்தி மாருதி கோயிலில் நம்மை வரவேற்றார். பின்னர் அங்கிருந்து பேசிக்கொண்டே அந்த மலைப்பகுதியை நோக்கி நடை போட்டு பாழடைந்த அந்த விடுதியை அடைந்தோம். ஷ்யாம்லால் விடுதி என்ற அக்கட்டடம் அதன் உரிமையாளரால் வெகு காலத்திற்கு முன்பே கைவிடப்பட்டது என தெரியவந்தது.

'நாங்கள் திரும்பமாட்டோம்'

கிராமத்தை விட்டு இங்கு ஏன் வந்தீர்கள் என அவ்விடுதியிலிருந்த இளைஞரை கேட்டோம். கிராமத்தலைவராக உள்ள பெண்ணைத்தான் கேட்கவேண்டும் என பதிலளித்தார் அவர். கிராமத்து தலைமை பதவியில் உள்ள ஷாலு பாய் ஷிண்டே என்ற பெண் அவராகவே நம்மிடம் பேச முன் வந்தார். இவரும் தலித் சமூகத்தை சார்ந்தவர்தான்.

கிராமத் தலைவராக இருந்து என்ன பிரயோஜனம் என்ற புலம்பலுடன்தான் பேச்சை ஆரம்பித்தார் ஷாலு.

"இங்கு எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கின்றன. எனது கணவர் பல முறை குறி வைக்கப்பட்டுள்ளார்" என்றார் ஷாலு.

"சாதி பிரச்னைகள் தங்கள் கிராமத்தில் நடப்பது இது 3வது முறை" என்றார் ஷாலு.

"முதல் இரு முறையும் குணவந்த் ஷிண்டே என்ற மாதங் சமூக இளைஞரால்தான் நேரிட்டது. இப்போது திருமண சீசனில் மீண்டும் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இனியும் அந்த கிராமத்துக்கு செல்ல விருப்பமில்லை...அந்த பிரச்னைகளுக்குள் செல்லவே நாங்கள் விரும்பவில்லை" வெறுப்பு நிறைந்த குரலில் கூறுகிறார் ஷாலு.

அந்த கிராமத்திற்கு போக நாங்கள் விரும்பவில்லை...ஏனெனில் நாங்கள் மரியாதையுடன் வாழ முடியாது என்கிறார் அருகில் நின்றிருந்த ஷாலுவின் மகன் ஈஷ்வர் ஷிண்டே.

புது ஆடை அணிந்தாலும் கேள்வி கேட்பார்கள்...ரிக்ஷாவில் கொஞ்சம் பாட்டை சத்தமாக வைத்து கேட்க விடமாட்டார்கள்...என குமுறுகிறார் ஈஷ்வர்.

பிரச்னையை தூண்டியது எது?

மாதங் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தார். கடந்த மே 9ம் தேதி வைஜ்நாத் ஷிண்டேவுக்கு திருமணம் நடந்தது. இதற்கு முன்னதாக ஹால்டி சடங்கிற்காக 8ம் தேதி மாருதி கோயிலுக்கு போனோம். அங்கு வந்த சில இளைஞர்கள் எங்களை அடித்துவிட்டனர். கோயிலில் உங்களுக்கு என்ன வேலை என மிரட்டினார்கள். எனவே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டோம்.

அடுத்த நாள் கிராமத்தில் திருமணம் நடந்தது.

பிரச்னையை தவிர்ப்பதற்காக அதற்கென உள்ள தந்தமுக்தி கமிட்டியின் தலைவர் பிராஜி அடோல்கரை அணுகினோம். இதோடு ஊரில் உள்ள பெரியவர்களின் உதவியையும் கேட்டோம். பிரச்னைக்கு தீர்வு காண 10ம் தேதி கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் 13ம் தேதிதான் கூட்டம் நடக்கும் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே சில அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. ஊரில் உள்ள இளைஞர் ஒருவருடன் எங்கள் உறவினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்தினரும் எங்களை கம்பால் கடுமையாக தாக்கினர்.

போலீஸார் வந்துதான் எங்களை மீட்டனர்.

இந்த தாக்குதல் பற்றி 10ம் தேதி புகார் தந்தோம். ஆனால் அது 11ம் தேதிதான் பதிவு செய்யப்பட்டது. நடந்ததை இப்படி விவரித்தார் ஈஷ்வர்.

இதன் பின் கிராமத் தலைவர் ஷாலு மாநில சமூக நல அமைச்சர் ராஜ்குமார் படோலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் லோனி அருகில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட வேண்டுமென அக்கடிதத்தில் ஷாலு கேட்டுக்கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகாரில் குணவந்த் ஷிண்டேவுக்கும் உயர்சாதி பெண் ஒருவருக்கும் காதல் இருந்ததாகவும் இதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மிரட்டலுக்கு உள்ளானதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

மே 8, 10 தேதிகளில் பிரச்னைகள் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. தலித் மக்கள் வீட்டுக்குள் வைத்து தாக்கப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

மற்றொரு பக்கம்...

இந்த பிரச்னையின் மற்றொரு பக்கத்தை அறிந்து கொள்ள ருத்ரவாடிக்கு சென்றோம். அது உத்கிரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 24 தலித் குடும்பங்களும் வெளியேறிவிட்டதால் மராத்தா இனத்தவரின் ஆதிக்கத்தை உணர முடிந்தது.

மாதங் சமூகத்தை சேர்ந்த குணவந்த் ஷிண்டே அளித்த எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை நமக்கு காட்டியது தந்தமுக்தி குழு.

(அக்கடிதத்தின் நகல் பிபிசி மராத்தியிடம் உள்ளது).

இவ்விவகாரம் பற்றி ருத்ரவாடி கிராமத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் ஜூன் 22ம் தேதி அறிக்கை ஒன்றை அளித்தனர். கிராமத்தில் சாதிபாகுபாடு தொடர்பான எந்த பிரச்னையும் நடக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக மராத்தா மற்றும் யாலம் சமூகத்தை சேர்ந்த 23 பேர் மீது பொய்ப்புகார் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. அரசியல் ஆதாயங்களுக்காக சில அமைப்புகள் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கிராமத்தில் உள்ள சிலரிடம் பேச்சு கொடுத்தோம். "நீங்களே இந்த கிராமத்தின் நிலையை பார்க்கிறீர்கள்...வேலைசெய்யக்கூடிய ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் இந்த அறுவடை காலத்தில்...

சில தலைமுறைகளாகவே நான் இந்த கிராமத்தை பார்த்திருக்கிறேன். இங்கு சாதி சண்டை என்பதே இல்லை. இந்த ஊரில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வீடு திரும்பினால் மகிழ்ச்சி" என்றார் கவசல்யாபாய் ராஜாராம் அடோல்கர் என்ற பெண்.

அறுவடை சீசன் என்பதால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலத்துக்கு சென்றுவிட்டனர். அங்கிருந்து வந்த சில இளைஞர்களிடம் பேசினோம். மதாங் சமூகத்தை சார்ந்த குணவந்த் ஷிண்டேவுக்கும் மராத்தா பிரிவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையிலான காதல் விவகாரம்தான் அத்தனை பிரச்னைக்கும் காரணம் என்கிறார் யாதவ் வைஜிநாத் அடோல்கர்.

இதற்கு சாதி சாயம் பூசப்பட்டு சச்சரவாக்கப்பட்டு விட்டது என்கிறார் அவர்.

இவ்விவகாரம் பற்றி தந்தமுகி கமிட்டியின் தலைவர் பிராஜி அடோல்கர் நம்மிடம் விளக்கினார். பிரச்னைகளை பேசி தீர்ப்பதற்காக 9ம் தேதி கூட்டத்தை கூட்டுமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் 12ம் தேதி கிராமத்தில் வேறொரு திருமணம் நடக்கவிருந்ததால் கூட்டத்தை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தோம்.

ஆனால் அதற்குள் பிரச்னை பெரிதாகி போலீஸ் வரை சென்றுவிட்டது என்றார் அடோல்கர்.

இந்த விவகாரத்தை பற்றி விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஸ்ரீதர் ஷிண்டேவிடமும் பேசினோம். இந்த வழக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். சம்மந்தப்பட்ட எல்லா தரப்புகளிடமும் விசாரித்து வருகிறோம். கிராமத்தில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தருவோம். குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரில் 11 பேரை கைது செய்துவிட்டோம். தலைமறைவான 12 பேரை தேடி வருகிறோம் என்றார் பவார்.

இதைத் தொடர்ந்து மாநில சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலிடம் பேசினோம்.

இவ்விவகாரத்தில் என்ன நடந்தது என்ற முழு உண்மையும் எனக்கு தெரியவில்லை என்றார் அவர். விவரங்கள் முழுவதும் தெரிந்தபின்புதான் உங்கள் கேள்விகளுக்கு பதில் தர முடியும் என சுருக்கமாக முடித்துக்கொண்டார் அமைச்சர்.

இதற்கு பிறகு அமைச்சரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் முடியவில்லை. அவருடன் பேசி தகவல்களை பெற்றால் அதை இந்த செய்தித்தொகுப்பில் பின்னர் சேர்ப்போம்.

மாதங் சமூகத்தை சேர்ந்த 100 பேர் கிராமத்திற்கு வெளியே கடந்த 21 நாட்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் அந்த கிராமத்திற்கு திரும்ப விருப்பமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

இவ்விஷயத்தில் முழு உண்மையும் எனக்கு தெரிந்த பின்பே இது பற்றி பேச முடியும் என முடித்துக்கொண்டார் அமைச்சர்.

மதாங் சமூகத்தை சேர்ந்த 100 பேர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி 20 நாட்களுக்கு மேலாகிவிட்டது. எப்போது ஊர் திரும்புவீர்கள் என அவர்களிடம் நாம் கேட்ட கேள்விக்கு வந்த பதில் ...செல்லவிரும்பவில்லை என்பதுதான் ...

தலைமுறைகள் தாண்டிய தங்கள் கிராமத்துடனான பந்தத்தையே வெறுக்க வைத்து மக்களை அகதிகள் போன்றாக்கிவிட்டது சாதி சண்டை...

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
24 Scheduled Caste families have had to leave their village in Maharashtra’s Latur district after the upper castes allegedly ostracised them by barring them from shops, not giving them job opportunities and limiting their freedom to move around in the village, Rudrawadi in Udgir taluka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X