மேடையில் கோரிக்கை வைத்த மல்யுத்த வீரர்... பளாரென அறைந்த பாஜக எம்பி... வீடியோ வைரல்
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் மேடையேறி கோரிக்கை வைத்த மல்யுத்த வீரரை பாஜக எம்பி பளார் என அறையும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மல்யுத்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடுமாறு அந்த போட்டியாளர் தொடர்ந்து கெஞ்சியதால் கோவம் அடைந்த எம்பி மல்யுத்த வீரரை அடித்ததாக கூறப்படுகிறது.
15 வயதை கடந்த இளைஞர் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷாஹீத் கன்பத் ராய் உள்விளையாட்டு அரங்கில் 15 வயதுக்குட்பட்ட தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த விழாவில் உத்தரபிரதேசத்தின் கைகர்கஞ்ச் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங்கிடம் ஒரு இளைஞர் சென்று தனக்கு மல்யுத்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் மல்யுத்த போட்டி 15 வயதுக்கு உட்பட்வர்களுக்கானது என்றும் இந்த இளைஞர் 15 வயதை கடந்துவிட்டதால் வாய்ப்பு வழங்க இயலாது எனவும் எம்.பி.யிடம் தெரிவித்தனர்.
இதை அடுத்து இந்த இளைஞரை மேடையை விட்டு இறங்குமாறு பாஜக எம்பி கூற அந்த இளைஞர் மீண்டும் மீண்டும் கெஞ்சி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரிஜ்பூஷன் சரண் சிங் அந்த இளைஞரை பளார் என கன்னத்தில் அறைந்தார். பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாஜக எம்பி ஒருவர் மல்யுத்த வீரரை அறைந்த சம்பவம் கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications