மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியைச் சிக்கவைக்க பாஜக ஒரு நுட்பமான "சக்ரவியூகம்" அமைத்துள்ளது. 2021 நந்திகிராம் தேர்தலில் அவரைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரியை, மம்தாவின் வலுவான தளமான பவானிபூரில் பாஜக களமிறக்கியுள்ளது. மம்தாவை மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்ய விடாமல் பவானிபூர் தொகுதியில் முடக்குவதே இதன் நோக்கமாகும்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் மிக பெரிய வெற்றியைப் பெற்றாலும் கூட நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியைச் சந்தித்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் பவானிபூரில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இப்போது மீண்டும் மம்தாவின் தொகுதி பேசுபொருள் ஆகியுள்ளது.

மம்தா
இந்த முறையும் மம்தா மீண்டும் பவானிபூர் களமிறங்குவார் என தெரிகிறது. மாநிலம் முழுக்க அவரை பிரச்சாரம் செய்ய விடாமல் அவரை பவானிபூரிலேயே முடக்குவதே பாஜகவின் முக்கிய நோக்கம். மம்தாவை 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் எனச் சபதம் செய்துள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது. இதன் மூலம் ஒரே இடத்தில் அவரை கட்டிப்போட பாஜக முயல்கிறது. இது மம்தாவின் பிரச்சாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
சிக்கல்
திரிணாமுல் வேட்பாளர்கள் மம்தாவின் பேரணிகளைப் பெரிதும் நம்பியிருப்பதால், அவரைச் சுதந்திரமாகச் செயல்படாமல் தடுக்க பாஜக விரும்புகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மம்தாவை நந்திகிராமில் சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இப்போது மீண்டும் பவானிபூரிலும் தோல்வி அடைந்தால் அது மம்தாவின் அரசியல் செல்வாக்கைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அவரால் பவானிபூர் தொகுதியை அப்படியே விட்டுவிட முடியாது.
ஒருவேளை பவானிபூரில் போட்டியிடாமல் மம்தா விலகினால், "களத்தை விட்டு ஓடியவர்" என பாஜக குறிவைக்கப்படுவார். திரிணாமுல் தொண்டர்களின் மன உறுதி குலையும். இப்படி என்ன செய்தாலும் திரிணாமுலுக்கு தான் சிக்கல் என்ற நிலையே இருக்கிறது. சரியாக இதுவே பாஜகவின் பிளான்.
பாஜக
கடந்த 2021ல் மம்தாவை நந்திகிராமில் வைத்து சுவேந்து அதிகாரி வீழ்த்தியது பாஜகவுக்கு மேற்கு வங்க அரசியலில் திருப்புமுனையாக அமைந்தது. சுவேந்து அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றுத் தந்தது. இதே நந்திகிராமில் வைத்துத் தான் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற மம்தா தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கி இருந்தார். அதே இடத்தில் மம்தா தோற்றிருப்பது அவரது இமேஜ்ஜை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் மம்தாவால் பவானிபூரில் மீண்டும் ரிஸ்க் எடுக்க முடியாது.
பவானிபூரை பொறுத்தவரை அது கிட்டத்தட்ட மினி பாரத் என்றே சொல்லலாம். அங்கு வசிக்கும் மக்களில் 40% பேர் வங்காளிகள் அல்லாதோர்.. பெரும்பாலும் குஜராத்திகள், மார்வாரிகள் ஆவர். அதேபோல 20% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த தொகுதி வரலாற்று ரீதியாக திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவானது. அதேநேரம் வங்காளிகள் அல்லாதோர் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் பாஜக இறங்குகிறது. இப்படி இரு தரப்பிற்குமே கணிசமான ஆதரவு இருப்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
எஸ்ஐஆர்
2021ல் மம்தா பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் மம்தா 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இதே தொகுதியில் இப்போது எஸ்ஐஆர் பணிகளால் வாக்காளர் பட்டியலில் 47,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், 14,000 பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவை போலி வாக்காளர்கள் என பாஜக சொல்கிறது. ஆனால், இதை மறுக்கும் திரிணாமுல் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் சதி செய்வதாகக் குற்றம் சாட்டுகிறது. மம்தா கடந்த முறை வென்ற வாக்கு வித்தியாசத்தை விடச் சர்ச்சையில் உள்ள வாக்குகள் அதிகமாக உள்ளது. இதனால் தேர்தல் எப்படி வேண்டும் என்றாலும் போகலாம் என்ற நிலையே உள்ளது.
மம்தாவை முடக்குவதே பாஜகவின் திட்டம் என்றாலும் கூட அவர்களின் இந்த 'சக்ரவியூகம்' வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி தான். மம்தா கட்சியின் வலுவான நெட்வோர்க் இதை முறியடிக்கலாம். பாஜக இதை ஒரு "கௌரவப் போர்" களமாக மாற்ற இதைச் செய்கிறது என்பதை உணர்ந்த திரிணாமுல் அதற்குப் பதிலடி கொடுக்கவும் ரெடியாகியுள்ளது.
மாறி மாறி சக்கர வியூகம்
அதாவது மம்தாவை லாக் செய்ய பாஜக நந்திகிராம் மற்றும் பவானிபூரில் சுவேந்து அதிகாரியை இறக்குகிறது. சுவேந்துவை நந்திகிராமில் முடக்க அங்கு அபிஷேக் பானர்ஜியை களமிறக்க மம்தா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அபிஷேக் கடந்த சில மாதங்களாக அங்கு இறங்கி வேலை செய்து வருகிறார். சுவேந்து அதிகாரிக்கு நந்திகிராம் வெற்றி முக்கியமானது.
ஏனென்றால் ஏற்கனவே மேற்கு வங்க பாஜகவில் அவர் வெளியாள் என்றும் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் விமர்சனங்கள் உள்ளது. இந்தச் சூழலில் அவர் இரு தொகுதிகளிலும் தோற்று எம்எல்ஏ கூட ஆகவில்லை என்றால் அவரது அரசியல் பயணமே கூட முடிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் அபிஷேக் பானர்ஜி அங்குக் களமிறங்கினால் பெரிய சிக்கல் தான்!












Click it and Unblock the Notifications