அரை நிர்வாணமாக்கி.. பெல்ட்டால் அடித்த கொடூரம்! சத்தீஸ்கரில் பீஃப் விற்றதாக 2 பேர் மீது தாக்குதல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் மாட்டிறைச்சி விற்றதாக கூறி இரண்டு பேரை சிலர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கியவர்கள் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மாட்டுக்கறி விற்றவர்களை சட்டையை கழற்ற வைத்து பெல்டால் அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலதுசாரி அமைப்பினர்
இந்தியாவில் குறைந்த விலையில் அதிக அளவில் புரதம் கிடைக்கும் உணவுகளில் மாட்டிறைச்சி முதன்மையானதாக இருக்கிறது. மாட்டிறைச்சி பரவலாக உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் அரசியல் ரீதியாக பலமாக உள்ள மாநிலங்களில் இந்த இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்ப்பு, ஆதரவு விவாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் மாட்டிறைச்சி விற்பதாக கூறி குறிப்பிட்ட சிலர் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மாட்டிறைச்சி
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் மாட்டிறைச்சியை விற்றதாக இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று இருவர் பைக்கில் வெள்ளை நிற மூட்டை ஒன்றை கொண்டு சென்றுள்ளனர். இவர்களை இடைமறித்த குழு ஒன்று மூட்டையில் என்ன இருக்கிறது என்று விசாரித்திருக்கிறது. மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக அவர்கள் பைக்கில் வந்தவர்கள் கூறியதையடுத்து, அந்த குழு அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது.

தாக்குதல்
இதில் இருவரும் நிலைக்குலைந்துள்ளனர். பின்னர் அந்த குழுவினர் இருவரின் சட்டைகளை கழற்சி அரை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்து சென்றுள்ளனர். இவ்வாறு செல்லும் போது பெல்ட் கொண்டு இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குழுவில் இருந்தவர்கள் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றவர்களை கடுமையாக தாக்க வேண்டும் என்று முழக்கமிடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மற்றொருபுறம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கைது
சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பாதிக்கப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 33 கிலோ மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த இறைச்சி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ரிசல்ட் வந்தால்தான் அது மாட்டுக்கறி என்பது உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இவர்களை தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த தகவலையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications
