For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ்,வி.சி.க-கைவிட்ட கிராமப்புற வாக்குகள்

By BBC News தமிழ்
|
ஸ்டாலின்
Getty Images
ஸ்டாலின்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமப்புற வாக்குகளை தி.மு.க அறுவடை செய்திருப்பது அ.தி.மு.க தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவின் நிலையான பலமாகக் கருதப்பட்ட கிராமப்புற வாக்குகள், குறிப்பாக கிராமப்புறப் பெண்களின் வாக்குகள், அக்கட்சிக்கு இப்போது பெரிதும் உதவாதது போலவே தெரிகிறது. அதிமுக குற்றம் சாட்டுவது போல திமுக அரசின் முறைகேடுகளால் இந்தச் சரிவா, இல்லை அக்கட்சி உண்மையாகவே தனது பலத்தை இழந்துள்ளதா?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அ.தி.மு.கவை பின்னுக்குத் தள்ளிய காங்கிரஸ்

இதில், 140 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க 138 இடங்களிலும் அ.தி.மு.க 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 1,381 இடங்களில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களில் வென்றுள்ளன. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் அ.தி.மு.க 214 இடங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி 45 இடங்களையும் அ.ம.மு.க, தே.மு.தி.க ஆகியவை ஓர் இடத்தையும் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73 இடங்களும் அனைத்து மாவட்ட ஊராட்சிகளும் தி.மு.க வசம் வந்துள்ளது.

மாவட்ட ஊராட்சியில் போட்டியிட்ட 4 இடங்களில் 3 இடங்களிலும், 43 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 27 இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் ஐந்து மாவட்ட கவுன்சிலர் பதவிகளை காங்கிரஸ் பிடித்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடங்களிலும் மூன்றாவது இடத்தை காங்கிரஸ் பிடித்துள்ளது. காங்கிரஸ், வி.சி.கவை விடவும் மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இப்படியொரு தோல்விக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்த முயல்வதில், ஏதோ உள்நோக்கம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே அடிப்படைக் கொள்கையாக தி.மு.க வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்தத் தேர்தலில் வன்முறையை தி.மு.க கட்டவிழ்த்துவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்
Getty Images
எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்

நாடும் தாங்காது, ஏடும் தாங்காது'

மேலும், "வேட்புமனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் தி.மு.க அரசும் தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் நடத்தியுள்ள விதிமீறல்களையும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது" எனத் தெரிவித்துவிட்டு கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த தேர்தல் விதிமீறல்களை பட்டியலிட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். பல இடங்களில் வெற்றி பெற்றவர்களை தோல்வியடைந்தவர்களாக அறிவித்துள்ளனர். இதுபோன்ற ஜனநாயகப் படுகொலைகளை தி.மு.க. நடத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாபு முருகவேல் மூலம் 7 புகார் மனுக்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கியுள்ளோம். அந்தப் புகார் மனுக்களுக்கு ஒப்புகைச் சீட்டும் பெற்றுள்ளோம். இந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி என்பது புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி" என விமர்சித்துள்ளனர்.

அ.தி.மு.க தலைமையின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். உள்ளாட்சியில் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 20 சதவிகிதமாவது வெற்றி பெற வேண்டும். ஒரு ஒன்றியத்தில் 3 கிராமங்கள் வரும். அவற்றில் 5,000 முதல் 6,000 வாக்காளர்கள் இருப்பார்கள். சுமார் 2,000 வாக்குகளுக்கு மேல் வாங்கினால் வெற்றி பெறலாம். அதில் என்னதான் ஆளும்கட்சி அராஜகம் செய்தாலும் நல்ல வேட்பாளரை நிறுத்தினால் உறுதியாக வெற்றி பெறலாம். அ.ம.மு.கவினர்கூட ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வென்றுள்ளனர். எனவே, வெற்றிக்கு வேட்பாளரும் கட்சியும்தான் காரணம்" என்கிறார்.

அ.தி.மு.கவை கைவிட்ட கிராமப்புற வாக்குகள்

தொடர்ந்து பேசிய ஷ்யாம், "1986ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கிராமப்புற தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களில் வென்றது. கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாக்கு வங்கி என்பது இரட்டை இலைக்கானவை. அவை இந்தத் தேர்தலில் முழுமையாக கைவிட்டுப் போனதாகத்தான் பார்க்க முடிகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்புள்ளது போலத் தெரியவில்லை."

"காரணம், இதனை எம்.ஜி.ஆர் கட்சியாக அவர்கள் கருதவில்லை. தங்களுக்கு சொந்தமான கட்சியாகப் பார்க்கின்றனர். பணம் படைத்தவர்களுக்குத்தான் கட்சி சொந்தம் என்றால், கட்சியை உடைமையாகக் கருதும் மனோபாவம் அதிகரித்துவிடும்' என அண்ணா சொன்னார். அப்படித்தான் தற்போது அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.கவின் பழைய வரலாறு என்பது விளிம்பு நிலை மற்றும் பெண்களுக்கான கட்சியாகத்தான் அது இருந்தது. எம்.ஜி.ஆர் பக்கம் இருந்த பெண்களின் வாக்குவங்கியை ஜெயலலிதா அதிகரிக்கவே செய்தார்" என்கிறார்.

அதிமுக
Getty Images
அதிமுக

மேலும், முன்னதாக, 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது தி.மு.க 47 சதவிகித இடங்களைப் பிடித்தது. தற்போதைய மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க வெறும் 2 இடங்களைத்தான் பிடித்துள்ளது. அ.தி.மு.கவின் தற்போதைய தலைமை, இது ஆளும்கட்சியின் சதி' என்று கடந்துதான் போகும். கீழ்மட்ட அளவில் உள்ள தொண்டர்கள் ஒற்றுமையை விரும்புகின்றனர். இந்தத் தோல்வியின் மூலம் அ.தி.மு.க மனநிலையில் உள்ள கிராமப்புற நிர்வாகிகள்கூட, தி.மு.க பக்கம் செல்லும் வாய்ப்பு அதிகமாகும். கீழ்மட்டத்தில் அ.தி.மு.க என்ற கட்சி கரைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.

பா.ம.கவால் கிடைத்த தோல்வியா?

வடமாவட்டங்களில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டதால்தான் அ.தி.மு.கவுக்கு இப்படியொரு தோல்வியா?" என்றோம். அப்படித் தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்த உள்ளாட்சியில் வன்னியர் வாக்குவங்கி உள்ளதாக கூறப்படும் இடங்களில் 1,100 கிராமங்கள் வருகின்றன. அதில், 300 இடங்களில் பா.ம.க வென்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். சில இடங்களில் அ.தி.மு.கவுடன் அவர்கள் சமரசம் செய்து கொண்டாலும் வெற்றி கிடைக்கவில்லை" என்கிறார்.

பா.ம.க அ.தி.மு.க
ANBUMANI RAMADOSS TWITTER
பா.ம.க அ.தி.மு.க

உள்ளாட்சியில் கிடைத்த தோல்வியால் அ.தி.மு.க கரையும் என்ற விமர்சனம் சரியா?" என அ.தி.மு.கவின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையிடம் பேசினோம். இந்தக் கருத்துகள் எல்லாம் தி.மு.கவின் ஊதுகுழலில் இருந்து வரும் வார்த்தைகள்தான். இவை முற்றிலும் தவறானவை. ஏராளமான கிராம ஊராட்சிகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.கவின் வெற்றி என்பது புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றிதான்" என்கிறார்.

கார்வலம், ஊர்வலம், கரன்ஸி மழை

தொடர்ந்து பேசிய இன்பதுரை, உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றத்தை அணுகினோம். காரணம், உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க கையாளும்விதம் என்பது உலகப் பிரசித்தி பெற்றது. 2006 டிசம்பர் மாதம் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலை, இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு பொதுவாக நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. ஆனால், இதில் தலையிடக் காரணம், நீதிபதிகளின் வாக்குகளையே சிலர் செலுத்தியதுதான். தேர்தல் அதிகாரிகள் அடிவாங்கியபடி தலைவிரி கோலமாக வெளியில் வந்தனர். இதனைப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் 356 பக்கங்களில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் தி.மு.க அரசையும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்திருந்தது.

இவர்கள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வார்கள் என்பது தெரிந்ததால் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்தில், அனைத்தையும் செய்கிறோம்' எனக் கூறிவிட்டு எதையும் அவர்கள் செய்யவில்லை. உதாணரமாக, சபாநாயகரின் மகன், ராதாபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளரின் மகன் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார். அமைச்சர்கள் புடைசூழ சபாநாயகர் மகன் வர வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் பிரசாரத்தில் தன்னை எதிர்த்துப் பேசினார் என்பதற்காக ஓட்டலுக்குச் சென்று தி.மு.க எம்.பி ஞான திரவியம் தாக்கிய விவகாரமும் பெரிதானது. தேர்தல் முடிவுகளை எல்லாம் தி.மு.க தலைமையிடம் கேட்ட பிறகே தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்" என்கிறார்.

மேலும், இந்தத் தேர்தல், அ.தி.மு.கவுக்கு பின்னடைவு அல்ல. இதற்கு மத்தியிலும் ராதாபுரத்தில் உள்ள ஒரு வார்டில் தி.மு.க டெபாசிட் இழந்த சம்பவமும் நடந்தது. மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களிக்கத் தயாராக இருந்தாலும் அவர்களை வாக்களிக்கவிடவில்லை. கார்வலம், ஊர்வலம், கரன்ஸி மழை என தி.மு.க செயல்பட்டது. அவர்கள் பெற்ற வெற்றி என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடியாக உள்ளது" என்கிறார்.

திமுக
Getty Images
திமுக

தி.மு.க எப்படி வென்றது?

புறவாசல் வழியாகத்தான் தி.மு.க வெற்றி பெற்றதாக அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறதே?" என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். ஒன்றிய கவுன்சிலில் 1,381 பதவிகளில் 200 பதவிகளை இவர்கள் புறவாசல் வழியாகத்தான் பெற்றார்களா? ஐந்து மாதங்களாக ஜனநாயகரீதியில் ஓர் அரசு செயல்படுகிறது. தி.மு.க எம்.பி மீது குற்றச்சாட்டு வந்தால்கூட, அவரை நீதிமன்றத்தில் சரணடைய வைக்கின்றனர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டபோது, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதுகுறித்துப் பேசவே இல்லை. இந்த ஆட்சியில் அம்மா உணவகத்தை அடித்தவர்களை உடனே கைது செய்தனர். மக்களின் குரலைக் கேட்கும் முதலமைச்சர் இங்கு இருக்கிறார். இந்த நம்பிக்கைதான் வெல்ல வைத்துள்ளது" என்கிறார்.

நீதிமன்றத்தில் தி.மு.க அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்கிறார்களே?" என்றோம். நீதிமன்றத்தில் அ.தி.மு.க வைத்த கோரிக்கையில், அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி கேமரா வைக்க வேண்டும்' என்றார்கள். அனைத்து இடங்களிலும் வைக்க முடியுமா எனத் தெரியவில்லை. தேவைப்படும் இடங்களில் வைப்போம்' எனக் கூறி அதையும் செய்தனர். 12,000 பூத்துகளில் தேர்தல் நடந்துள்ளது. அதில் 6 பூத்துகளைக் குறிப்பிட்டு அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. அந்த இடங்களிலும் உள்கட்சி மோதல், தனிமனித மோதல் என சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. வாக்குப் பெட்டியை கைப்பற்றும் வேலைகள் எங்காவது நடந்ததா? மக்கள் மிரட்டலுக்கு பயந்து வாக்களித்தார்கள் என்தெல்லாம் ஆரோக்கியமற்ற பேச்சாகவே பார்க்க முடிகிறது" என்கிறார்.

மேலும், அ.தி.மு.க ஆட்சியில் ஊராட்சி மன்றத் தேர்தலே நடக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நடத்துகின்றனர். மக்களும் அதனை உணர்கின்றனர். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு, 4,000 ரூபாய் கொடுத்தது என சொல்வதை செய்யும் கட்சியாக தி.மு.க உள்ளது. அதனால்தான் கிராமப்புற வாக்குகள் முழுமையாக தி.மு.க பக்கம் வந்தன" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Congress and VCK were in front runners when compared to AIADMK in TN local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X