திடீரென கலர் மாறிய வாரணாசி காங். அலுவலகம்.. சொந்த கட்சியினருக்கே தெரியாதாம்.. அப்படி என்ன நடந்தது?
வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாரணாசியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்குக் காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாமல் வேறொரு பெயிண்ட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை சேர்தல் நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இதைக் கருதலாம் எனத் தேர்தல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிலும் கூட பிரதமர் மோடி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம் என்பதால் உத்தரப் பிரதேச தேர்தல் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

உத்தரப் பிரதேச தேர்தல்
இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியும் சமீப காலங்களில் அடிக்கடி உத்தரப் பிரதேசம் சென்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார்.

பிரதமர் மோடி
அதன்படி வரும் டிசம்பர் 13ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு வருகிறார். அங்கு வாரணாசியில் உள்ள காசி-விஸ்வநாத் வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள அனைத்து கட்டிடங்களும் சீரான தோற்றம் அளிக்கும் வகையில் பிங்க் நிறத்தில் அதிகாரிகள் பெயிண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய ஷாக்
கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது. பிரதமர் வருகைக்காகக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தையும் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தது வாரணாசி மாநகராட்சி நிர்வாகம். இது அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார் கடிதம்
இது தொடர்பாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் அசோக் குமார் சிங் மாவட்ட வளர்ச்சி அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், "அலுவலகத்தை அடுத்த 36 மணி நேரத்திற்குள் பழைய நிலைக்கு மாற்றித் தர வேண்டும். இல்லையெனில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி அலுவலகத்திற்கு எவ்வித அனுமதியின்றி வண்ணம் பூசுவது சட்டத்திற்கு எதிரானது" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மசூதி
முன்னதாக பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருந்த மசூதியும் பிங்க் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னரே மசூதியை மீண்டும் பழைய நிறத்திற்கு மாற்றித் தந்தது வாரணாசி மாவட்ட நிர்வாகம். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அனுமதியின்றி நிறம் மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications