For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கே.எல். ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் - டிராவிட்டின் மனம் திறந்த கருத்தால் அடுத்து என்ன நடக்கும்?

By BBC News தமிழ்
|

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை என்று கிரிகெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அணியின் திறமையை சரியாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மறுபுறம், வீரர்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில் சமமின்மை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆம், டெம்ப்ளேட்டை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வெளிப்படையாக, டெம்ப்ளேட்டின் பெரும்பகுதி என்பது அணியின் சமநிலையைப் பொறுத்தது," என்றார்.

50 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி அதன் டெம்ப்ளேட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு "கொஞ்சம் நேர்மையாக சொல்வதென்றால், 6, 7 மற்றும் 8 ஆகிய எண்களில் உள்ள ஆல்-ரவுண்ட் வாய்ப்புகளாக அணியை சமநிலைப்படுத்த எங்களுக்கு உதவும் சில வீரர்கள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்," என்று அவர் பதிலளித்தார்.

தனது பந்துவீச்சு உடற்தகுதியை மீட்டெடுக்க முயற்சிக்கும் பாண்டியா மற்றும் முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜடேஜா இல்லாதது குறித்து தெளிவாகவே பேசுவதாக டிராவிட் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது.

டெஸ்ட் தொடரை 2:1 என்றும் ஒருநாள் தொடரை 3:0 என்றும் தென்னாப்பிரிக்கா வென்றது.

https://twitter.com/BCCI/status/1485297694658949123

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு நாள் போட்டிகளில் மூன்றிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி என தொடர்ந்து 5 போட்டிகளில் இந்தியா கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது.

இதற்கிடையே, டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வீராட் கோலி விலகியது, அணியின் தொடர் தோல்விகள் என இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு அடுத்தடுத்து பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக, நேற்றைய கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 49.5 ஓவரில் 287 ரன்னுடன் ஆல் அவுட் ஆனது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் 9 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் ஷிகர் தவான் 61 ரன், வீராட் கோலி 65 ரன் எடுத்தனர்.

ஆனால், கோலி அவுட் ஆனதைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், முதல் பந்திலேயே 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசி 18 பந்துகளில் 10 ரன் எடுத்தால் போதும் என்கிற நம்பிக்கை இலக்கை அடைந்தனர்.

ஆறுதல் வெற்றி உறுதி என்று நம்பிய ரசிகர்கள் இறுதியில் ஏமாந்தனர்.

இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி கட்டத்தில் 5 ரன் எடுக்க முடியாமல் ஒயிட் வாஷ் தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது.

இந்திய அணியில் நீண்ட காலமாக உள்ள மிடில் ஆர்டர் பிரச்னை தான் இதற்கு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் வீரர்கள்.

விராட் கோலி தலைமையிலான அணியில் கே.எல். ராகுல் நடுவரிசையில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இல்லாததால் அந்த இடத்தில் மற்றொரு தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஆடினார்.

இந்த ஆட்டத்தில் நடுவரிசையில் விளையாடி இருக்க வேண்டிய ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி பெரியதாக சாதிக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

அணியின் பந்துவீச்சு ஒருநாள் தொடர் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜடேஜா போல் ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் போனது அணியின் செல்பாட்டை பாதித்துள்ளது.

இதை குறிப்பிட்டே ராகுல் டிராவிட் வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்தார். அவர்கள் (ஹர்திக் மற்றும் ஜடேஜா) திரும்பி வரும்போது, எங்களுக்கு இன்னும் நிறைய நம்பிக்கை கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

கே.எல். ராகுலின் தலைமையால் கிடைத்த விளைவா இது என கேட்டபோது, "இப்போதுதானே அவர் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்திலேயே அதை மட்டுப்படுத்தி விடக்கூடாது," என்று டிராவிட் தெரிவித்தார்.

என் விருப்பப்படி இருக்கும் அணியில் மட்டுமே நினைத்ததை செய்ய முடியும். இல்லையென்றால் கிடைத்த அணியில் என்ன முடியுமோ அதைத்தான் முடிவாக தர முடியும் என்றும் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை

இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜியிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''ஒரு புதிய கேப்டன் பொறுப்பேற்றதும், உடனடி வெற்றிகளை, அதுவும் வெளிநாட்டு மண்ணில் எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.

அதேநேரத்தில் இந்திய அணியில் அனுபவம் உள்ள வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் நடைமுறைத் தவறுகளை திருத்தி, வெற்றிப் பயணத்தை தொடங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய அணியினர் முடிந்தவரை நன்றாக விளையாடினர். சிறிய தவறுகளால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. தோனிக்கு பிறகு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான இடத்தை பூர்த்தி செய்யக் கூடிய நபர் இன்னும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை. வரும் தொடர்களில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அந்த குறையும் சரியாகலாம்.'' என்கிறார் பாலாஜி.

அணியில் ஒருங்கிணைப்பு இல்லை

கிரிக்கெட்
BBC
கிரிக்கெட்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நடுவர் மற்றும் விளையாட்டு செய்தியாளர் சுப்புராமன் கூறுகையில், ''பேட்டிங்கிற்கு சாதகமான சூழ்நிலையில் இந்தியாவில் விளையாடி வருவதால், அயல்நாட்டு ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் சொதப்புவது வழக்கமானதுதான்," என்றார்.

"டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்த கோலியை நீக்கியதால் அவர் ஈடுபாடில்லாமல் விளையாடுகிறார். அணி வீரர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை. பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கையில் கோலை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது," என்று சுப்புராமன் தெரிவித்தார்.

"ரகானே, புஜாரா போன்ற வீரர்களை தூக்கி விட்டு, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பல இளம் புதிய வீரர்கள் வாய்ப்பிற்காக காத்துள்ளனர். பொதுவாக அணியை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை கட்டாயமாகிவிட்டது.'' என்கிறார் அவர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

புதிய கேப்டனிடம் உடனடி வெற்றிகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

கிரிக்கெட் பயிற்சியாளர் எஸ்.பாலாஜி, ''அணிக்குள் ஒருங்கிணைப்பு இன்னும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதைத்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் கூறியுள்ளார். நல்ல அனுபவம் உள்ள அவர் இந்த குறைகளை களைய தீவிர முயற்சி எடுப்பார் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில், திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்க வேண்டும். மூத்த வீரர்கள் சிலரை வைத்துக்கொண்டு துடிப்பான இளம் வீரர்களையும் களம் இறக்க வேண்டும். ரித்துராஜ் போன்ற வீரர்களைப் பயன்படுத்த வேண்டும். ஓரிரு போட்டிகளை வைத்து அவர்களை ஒதுக்கி விடக்கூடாது, என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Cricket fans criticises K.L.Rahul after Rahul Dravid's open statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X