For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா அமைதி காத்தால் மீண்டும் 'புலி' உறுமும்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தொடர் மவுனம் நீடித்து வந்தால் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியது. இதனால் உலகத் தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை வெறுப்புடன்தான் பார்த்து வருகின்றனர்.

அதே காலகட்டத்தில்கூட பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிடும், யுத்தத்தை நிறுத்திவிடுவார்கள் என்று புலிகளுக்கு நம்பிக்கையூட்டப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனாலும் புலிகளும் வெல்ல முடியாத நிலை... பாஜகவும் ஆட்சி அமைக்க முடியாத நிலை 2009ல் இருந்தது.

எங்கே தலைவர்கள்?

இதன் பிந்தைய காலகட்டத்திலும் கூட ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர், யுத்தம் முடிவடைந்த போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பேபி சுப்பிரமணியம், யோகி, புதுவை ரத்தினதுரை, பாலகுமாரன் உள்ளிட்ட ஏராளாமானோர் கதி என்னவானது? என்பது இன்றுவரை மர்மமாகத்தான் இருக்கிறது.

ராணுவமயமாக்கல்

அதேபோல் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் முழு வீச்சில் திணிக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகாலம் ஓடிவிட்ட நிலையிலும் கூட சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தமிழர் தாயகப் பிரதேசங்கள் இருக்கின்றன.

வடக்கு மாகாண சபை தேர்தல்

புலிகள் இல்லாத சூழலில் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்ட வடக்கு மாகாண சபை தேர்தலிலும் கூட தமிழர்கள் தெள்ளத் தெளிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களித்து தேர்வு செய்தனர். சிங்களக் கட்சிகளுக்கு பெரும்பான்மையை தமிழர்கள் தரவில்லை. ஆனாலும் வடக்கு மாகாணசபை என்று இந்தியாவின் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தைக் கூட கொண்டதாக இருக்கவில்லை.

If India is silent another LTTE will emerge in Sri Lanka?

பாஜகவின் ஆதரவு நிலை

இப்படி 2009ம் ஆண்டில் யுத்த முடிந்த பின்னரும் கூட தமிழர் மீதான சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை என்பது வெவ்வேறு வடிவங்களில் நீடித்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பு ஈழத் தமிழர் பிரச்சனையை பாரதிய ஜனதா கட்சி தமிழர்களின் பார்வையில் அணுகியது. தமிழக மீனவர்கள் பிரச்சனையில் தமிழினத்தின் குரலை எதிரொலித்தது. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கூட அமைப்போம் என்றெல்லாம் உறுதி கொடுத்தது.

தனி ஈழம் - யஷ்வந்த் சின்கா

தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் தனி ஈழம் அமைவது தவிர்க்க முடியாதது என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா சென்னைக்கு வந்து பேசிவிட்டெல்லாம் போனார். லோக்சபா தேர்தல் காலத்திலும் பாஜக தரப்பில் இதே போன்ற தமிழர் ஆதரவுக் குரல்கள் ஒலித்தன. தமிழீழத்தை ஆதரிக்கிற மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளுடனேயே பாஜக கூட்டணியும் அமைத்தது. இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டது.

ராஜபக்சேவுக்கு அழைப்பு

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான் பெற்று மோடி தலைமையில் ஆட்சியையும் அமைத்தது. பிரதமராக மோடி பதவி ஏற்ற முதல்நாளே ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்ததால் தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

வேலையை காட்டிய மோடி சர்க்கார்

இருப்பினும் ராஜபக்சேவிடம் மோடி கடுமை காட்டிப் பேசிவிட்டார் என்று வெளியான தகவல்கள் சற்றே ஆறுதலைத் தந்தது. சிங்களப் பேரினவாதிகளும் இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கத் தொடங்கிய போது ஆஹா, மோடி அரசு வேலையை காட்டுகிறது என்று தமிழர்கள் உளம் மகிழ்ந்தனர்.

இலங்கை ஆதரவு

ஆனால் மாதங்கள் உருண்டோடினவே தவிர ஈழப் பிரச்சனையில் மோடி அரசு ஆக்கப்பூர்வமான ஒருநிலைப்பாட்டையும் கூட எடுக்கவில்லை. நேர்மாறாக உலகத் தமிழர்கள் வெறுத்து ஒதுக்கி வைத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்பற்றிய "இலங்கைக்கு ஆதரவு" என்ற நிலையைத்தான் மோடி அரசும் கடைபிடித்தது தமிழர் மனங்களில் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சியதாக அமைந்தது.

ஐ.நா. குழு

இறுதி யுத்தத்தின் போது சிங்களப் பேரினவாத படைகள் கட்டவிழ்த்துவிட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த ஐ.நா. விசாரணைக் குழுவுக்கும் கூட இலங்கை அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

இந்தியாவும் அனுமதி மறுப்பு

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களிடம் விசாரணை நடத்த ஐ.நா. குழு முயற்சித்த போது அதற்கு மோடி தலைமையிலான அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

ராணுவ விலக்கல்

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பட்டும் படாமல்தான் இலங்கையிடம் சொன்னதே தவிர அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கண்டிப்பு காட்டவில்லை.

செத்துப் போன தீர்வு

இவற்றுக்கு எல்லாம் மேலாக "ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13வது அரசியல் சாசன திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு"தான் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று மோடி அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் வகுத்துக் கொடுத்த செத்துப் போன இந்த தீர்வுத் திட்டத்தை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும் தொங்கிக் கொண்டிருப்பது கண்டு தமிழர்கள் நொந்து நூலாகத்தான் வேண்டியிருக்கிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் அரசு செயலர் என்பவர் கூட முதல்வருக்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்கிறது இலங்கை அரசியல்சாசனம். இந்த லட்சணத்தில் எப்படி தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சியுடன் வாழ முடியுமோ தெரியவில்லை?

சுதந்திர நடமாட்டம் இல்லை

யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் எந்த ஒரு வெளிநாட்டவரும் தமிழர் வாழும் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வர முடியாது. யுத்த காலத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அனுமதி நடைமுறைகள் இன்றும் அமலில் உள்ள.

பீதி அடங்கவில்லை

ஈழத் தமிழர்கள் எவரும் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத "யுத்த கால சூழல்" தொடர்ந்தும் நீடித்தபடிதான் இருக்கிறது. சிங்களவர் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பீதி இன்னமும் அடங்குவதாகவும் இல்லை. அதனால் கண்ணில்படும் தமிழரெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.

திறந்தவெளி சிறைச்சாலை

இதனாலேயே ஈழத் தமிழர்கள் இன்னமும் ராணுவக் கட்டுப்பாட்டிலான திறந்தவெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய ஒடுக்குமுறைகளைத் தட்டிகேட்க வேண்டிய தார்மீக கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஆனாலும் காங்கிரஸைப் போலவே சிங்களப் பேரினவாதத்துடன் கை கோர்ப்பதில்தான் முனைப்பு காட்டுகிறது பாஜகவின் மோடி அரசும்...

மீண்டும் ஆயுத போராட்டம் வரலாம்..

ஈழத் தமிழர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது மோடி அரசைத்தான்.. மோடி அரசும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்கள் விரும்புகிற அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு முன்வராது போனால் மீண்டும் விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்துவோர் நிச்சயம் உருவாவார்கள் என்பதுதான் அரசியல் வல்லுநர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

English summary
The political commentators warn if India is silent in Eelam issue the Liberation Tigers of Tamil Eelam(LTTE) would re-emerge again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X