ரம்ஜானையொட்டி ஜோத்பூரில் பயங்கர மோதல்... பதற்றத்தால் இணையசேவை முடக்கம்... பரபரப்பு
ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜானையொட்டி கொடி, பேனர் மற்றுமு் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இருபிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு பதற்றம் நிலவுவதால் அங்கு இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக நேற்று இரவில் ரம்ஜான் பண்டிகைக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பொது இடத்தில் ஒலிபெருக்கி, பேனர்கள் வைக்கப்பட்டன.

இருதரப்பினர் மோதல்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஜலோரி சர்க்கிள் பகுதியில் பேனர், ஒலிபெருக்கி பொருத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீதும் கொடி ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜலோரி கேட்டில் இந்து கொடியை அகற்றி முஸ்லிம் கொடி நிறுவியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். கொடி, பேனர், ஒலிபெருக்கியை அகற்ற முயன்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு
இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். வாகனங்கள் சேதப்படுத்தனர். போலீசாரை நோக்கியும் கற்கள் வீசப்பட்டது. இதனால் எல்லை மீறி சென்ற மோதலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை விரட்டியடித்தனர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இணைய சேவைகள் முடக்கம்
மேலும் சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படலாம் என கருதப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையா ஜோத்பூரில் இணைய சேவைகள் முடக்கம் செய்யப்பட்டன. இருப்பினும் இன்று பாஜக எம்எல்ஏ சூர்காந்த வியாஸ் வசிக்கும் ஜாலோரி கேட் பகுதியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் ஜலோரி கேட் பகுதியில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

முதல்வருக்கு எதிர்ப்பு
இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டரில், "ஜோத்பூர் ஜலோரி கேட்டில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. எந்த விலை கொடுத்தும் அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜோத்பூர் எம்பியும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் செகாவத் சம்பவ இடத்துக்கு சென்றார். அவர் தலைமையில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபப்பட்டன.












Click it and Unblock the Notifications