புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் "இரும்பு பெண்" இரோம் ஷர்மிளா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இம்பால்: ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த, இரோம் ஷர்மிளா மக்கள் எழுச்சி நீதி கூட்டணி (People's Resurgence and Justice Alliance -PRJA) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண் என அழைக்கப்படுபவர் இரோம் ஷர்மிளா (44). சமூக ஆர்வலரான இவர் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2000ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

Irom Sharmila Launches New Party

ஆனால், ஷர்மிளா தற்கொலைக்கு முயற்சிப்பதாக வழக்குப்பதிவு செய்த போலீஸ், அவரைக் கைது செய்து மருத்துவமனையிலேயே சிறை வைத்தது. ஆனால், தொடர்ந்து 16 ஆண்டுகளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வந்தார். இதனால் மூக்கு வழியாக அவருக்கு உணவு செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் உண்ணாவிரதத்தை அவர் முடித்தார். மணிப்பூரில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.

இதனிடையே உண்ணாவிரதம் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இம்பால் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இருந்து ஷர்மிளாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வந்தார்.

இந்நிலையில் இம்பாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இரோம் ஷர்மிளா புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சி ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து தொடர்ந்து போராடும் எனவும் கூறினார். தேர்தலில் தோபல் மற்றும் குராய் ஆகிய தொகுதிகளில் தான் போட்டியிடப்போவதாகத் இரோம் தெரிவித்தார். குராய் இவரது சொந்த தொகுதியாகும். தோபல் தொகுதி முதல்வர் ஓக்ராம் ஐபோபி சிங் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Human rights activist Irom Sharmila on Tuesday announced the formation of a new regional party, 'Peoples Resurgence and Justice Alliance'
Please Wait while comments are loading...