பீகார் சட்டசபை இடைத்தேர்தலில் நிதீஷ்-லாலு கட்சிகள் கூட்டணி! பாஜகவை வீழ்த்த இணைந்த கரங்கள்
பாட்னா: பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளமும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளமும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பாஜகவை வீழ்த்துவதற்காக லாலு கட்சியுடன் கைகோர்க்க உள்ளதாக அவர் காரணம் தெரிவித்தார்.

10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இதுகுறித்து நிதீஷ்குமார் கூறியதாவது: அடுத்த மாதம் பீகாரின் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் இணைந்து போட்டியிட எங்கள் கட்சி செயற்குழுவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி வேலை ஜரூர்
பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை பீகார் மாநில ஐ.ஜ.த தலைவர் பசிஸ்தா நாராயண் சிங்கிற்கு அளித்துள்ளோம் என்றார்.

ஆர்.ஜே.டியும் தயார்
இதனிடையே ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் பீகார் மாநில சட்டப்பேரவை குழு தலைவரான அப்துல் பரி சித்திக், நிருபர்களிடம் கூறுகையில், "பீகாரில் பாஜக ஆதிக்கம் செலுத்துவதை எங்கள் கட்சி விரும்பவில்லை. எனவே ஒன்றுபட்ட கருத்துகொண்ட கட்சிகளுடன் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்.

தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை
இருப்பினும் இடைத்தேர்தலில் எத்தனை தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிட வேண்டும், பிற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. கூட்டணி அமைந்துவிட்டால் இதுபோன்ற சிறு விவகாரங்களை எளிதில் சமாளித்துவிடலாம்" என்றார்.

புனிதமில்லா கூட்டணி
அதே நேரம் பாஜக, இதை ஒரு புனிதமற்ற கூட்டணியாக வர்ணிக்கிறது. பீகார் மக்கள் பாஜகவை தவிர பிற கட்சிகளை லோக்சபா தேர்தலில், புறக்கணித்துவிட்டனர். எனவே பாஜகவுக்கு எதிராக அவர்கள் கூட்டணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது என்று பீகார் எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்.எல்.ஏவுமான நந்த கிஷோர் யாதவ் தெரிவித்தார்.

கைகோர்த்த எதிரிகள்
பீகாரைப் பொறுத்தவரை நிதீஷின் ஐக்கிய ஜனதா தளமும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் தமிழகத்து திமுக- அதிமுகவாகத்தான் இருந்து வந்தன. மாறிய அரசியல் சூழலில் தற்போது அம்மாநில அதிமுகவும் திமுகவும் கை கோர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.