For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதனை.. சத்தமே இல்லாமல் ஓராண்டை பூர்த்தி செய்த கர்நாடக முதல்வர் சித்தராமையா

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: அப்பாடா... ஒருவழியாக சத்தமே இல்லாமல் ரொம்ப நாளைக்கு அப்புறமாக கர்நாடக முதல்வர் ஒருவர் ஒரு வருடம் அந்த பதவியில் இருந்து சாதித்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல சித்தராமையாதான்.

கர்'நாடக'ம்

கர்'நாடக'ம்

பெயரிலேயே 'நாடகம்' உள்ளதாலோ என்னவோ கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகத்தில் அரசியல் கூத்துகளுக்கு பஞ்சமேயில்லாமல் இருந்தது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வர் பதவிக்காலம் முடிந்ததும் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆரம்பித்தது இந்த சிக்கல். 2004ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசும், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாவும் சேர்ந்து ஆட்சியமைத்தன. காங்கிரசின் தரம்சிங் முதல்வராகவும், மதசார்பற்ற ஜனதாதளத்தின் சித்தராமையா (இப்போதைய காங்.முதல்வர்) துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

காங்கிரசில் சித்தராமையா

காங்கிரசில் சித்தராமையா

2 ஆண்டுகள் கழித்து மஜத கட்சியை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் விட்டுத்தருவதாக கூறியிருந்தது. ஆனால் சித்தராமையாவை முதல்வராக்க தேவகவுடா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2006ல் ஆட்சிக்கு அளித்த ஆதரவை மஜத வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தது. மகன் குமாரசாமிக்காகத்தான் தன்னை முதல்வராக்கவிடவில்லை என்ற குற்றச்சாட்டுடன் மஜதவைவிட்டு பிரிந்து அஹிந்தா என்ற பெயரில் தனி இயக்கம் ஆரம்பித்த சித்தராமையா பின்னர் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

எடியூரப்பாவுக்கு அல்வா

எடியூரப்பாவுக்கு அல்வா

அதே நேரம் மஜதவும், பாஜகவும் இணைந்து ஆட்சியமைத்தன. குமாரசாமி முதல்வராகவும், பாஜகவின் எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியை மாற்றிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது மஜத.

மூன்று முதல்வர்கள்

மூன்று முதல்வர்கள்

2008 பொதுத்தேர்தலில் மஜத நம்பிக்கை துரோகம் செய்துவிட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது. எடியூரப்பா முதல்வரானதும், பிறகு பெல்லாரி கனிம குவாரி பிரச்சனை, ஆளுநருடன் தகராறு, எடியூரப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டசபை ஆபாச படம் பிரச்சனை என மெகா சீரியல்போல ஆகியது அந்த ஆட்சி. எடியூரப்பா சிறை சென்றதுடன், சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என அடுத்தடுத்து முதல்வர் பதவிக்கு வந்தனர். ஒரே ஆட்சியில் மூன்று முதல்வர்களை பார்த்தது. மக்கள் வெறுத்துப்போய் கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலத்தை கொடுத்தனர்.

முதல்வரானார் சித்து

முதல்வரானார் சித்து

அரசியலில் அப்பழுக்கற்றவர் என்ற பெயருடன் உள்ள சித்தராமையா கர்நாடக முதல்வராக மே 13ம்தேதி பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் மேலிடத்தை கண்டுகொள்ளாமல் தனது இஷ்டப்படியே அமைச்சரவையை அமைத்தார். ஊழல் கறைபடித்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அதையும் மீறி மேலிடம் மிகவும் நெருக்கடி கொடுத்ததால் ஊழல் புகாரில் சிக்கிய, டி.கே.சிவகுமாருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி அளிக்க வேண்டியதாயிற்று. வக்ஃப் வாரிய முறைகேடு புகாரில் சிக்கிய ரோஷன் பெய்க்கிற்கு செய்தி விளம்பர துறையை ஒதுக்க வேண்டியதாயிற்று. ஆனால் இதற்காக அவர்கள் சோனியாவை பார்த்து மிகவும் போராட வேண்டியதாயிற்று.

சத்தமில்லா ஆட்சி

சத்தமில்லா ஆட்சி

எது எப்படியோ ஒராண்டு காலமாக கர்நாடக அரசியல் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு அளித்தது, பால் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.4 மானியம் அளிப்பது போன்ற ஏழை மக்கள் ஆதரவு திட்டங்களும் ஜரூராக நடந்து வருகின்றன. சித்தராமையா முதல்வராகி இன்று ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில் எந்த ஒரு ஆடம்பரமான கொண்டாட்டத்திலோ அவர் ஈடுபடவில்லை. இன்றும் மக்கள் நலப்பணிகளை மட்டுமே சித்தராமையா மேற்பார்வையிட்டார்.

தலைக்கு மேல் கத்தி

தலைக்கு மேல் கத்தி

மக்களவை தேர்தல் முடிவு குறித்த எதிர்பார்ப்பால் ஓராண்டு பதவியேற்பு விழா கொண்டாடப்படவில்லை என்கின்றனர் சித்தராமையாவுக்கு நெருக்கமானோர்கள். மஜதவில் இருந்து வந்த குறுகிய காலத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் முதல்வர் பதவி அளித்துள்ளதால் தொடக்கம் முதல் காங்கிரசில் உள்ளவர்கள் அதிருப்தியிலுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கர்நாடகாவில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்வர் பதவிக்கு ஆபத்து என்ற பேச்சு காங்கிரசில் அடிபடுகிறது.

English summary
Karnataka Chief Minister Siddaramaiah today completed one year in office but chose not to mark the milestone with any celebrations as he awaits the results of the Lok Sabha elections in which he would be hoping for a strong showing by Congress in the state to consolidate his position in the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X