
தொடரும் பயங்கரம்.. தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை.. பின்னணியில் பாகிஸ்தான்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளால் காஷ்மீர் பண்டிட்டுகள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பின்னால் பாகிஸ்தான் சதி இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள பாதுகாப்பு அமைப்புகள், காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாட களம் இறங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நண்பர் வீட்டில் நடந்தது என்ன? காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி பலிக்கு காரணம் என்ன? விசாரிக்கும் போலீஸ்

வன்முறைக்கு இரையான காஷ்மீர் பண்டிட் சமூகம்
காஷ்மீரில் கடந்த 1990-களில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் மீது பயங்கர வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தீவிரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் அந்த சமூகத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த வன்முறைக்கு பயந்து காஷ்மீரில் இருந்து பெரும்பாலான பண்டிட்டுகள் வெளியேறி, பல மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காஷ்மீர் திரும்பவில்லை.

மீண்டும் குறிவைக்கப்படும் பண்டிட்டுகள்
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, காஷ்மீரில் பண்டிட்டுகளை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பேசப்பட்டது. கடந்த காலங்களை போல காஷ்மீரில் தீவிரவாதிகளின் கொட்டம் இல்லாததால், பண்டிட்டுகளும் காஷ்மீர் திரும்பி வந்தனர். இந்த சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும், பிரிவினைவாத இயக்கங்களுக்கும் பாஜக மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாஜகவுக்கு ஆதரவாக காஷ்மீர் பண்டிட்டுகள் குரல் கொடுத்து வந்ததால், பாஜகவின் மீதான தீவிரவாதிகளின் கோபம் காஷ்மீர் பண்டிட்டுகள் மீது திரும்பியது.

தொடரும் பயங்கரம்...
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2021-ம் ஆண்டு முதல் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தவர்கள், காவல்துறையில் பணிபுரியும் முஸ்லிம்கள் ஆகியோர் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, காஷ்மீர் பண்டிட்டுகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை
இந்நிலையில், இன்று அதிகாலை காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள செளதரி கன்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள், புரன் கிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் உடலில் பல இடங்களில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட புரன் கிஷனை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த புரன் கிஷனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்தது. இதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார்.

பொறுப்பேற்பும், பாகிஸ்தான் பின்னணியும்..
இந்நிலையில், இன்று நடந்த தாக்குதலுக்கு 'காஷ்மீர் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது, காஷ்மீரில் இயங்கி வரும் அல் - பதர் என்ற தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும். இதையடுத்து, இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களை பாதுகாப்புப் படைகள் தேடி வருகின்றன. இந்த சூழலில், காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவிததுள்ளன. காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை அனுப்பி, இதுபோன்ற தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.