
கோலியின் “தியாகம்”.. டிகேக்கு “சிக்னல்” - சாதனை நெக்ஸ்ட்.. வெற்றி ஃபர்ஸ்ட்! மக்கள் மனதை வென்ற “கிங்”
கவுஹாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி நடந்துகொண்ட விதம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்தே
மைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொள்பவர் என்ற பேச்சு உள்ளது. இதற்காகவே பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து இருக்கிறார்.
ஆனால், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர் தனது ஆக்கிரோஷத்தை சற்று குறைத்துக் கொண்டார். இருந்தாலும் அவ்வப்போவது ஆக்கிரோஷமும் அவசரமும் அவரது ஆட்டத்தில் வெளிப்பட்டே வந்தது.
பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி

ஃபார்ம் அவுட்
ஆனால், கடந்த ஆண்டு ஃபார்ம் அவுட் என்ற விமர்சனம் எழுந்த பின் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலியை அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தான் மன அழுத்தத்தில் இருப்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார் கோலி. ஆனால், ஆசிய கோப்பையில் தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்த கோலி அசத்தலான சதத்தை விளாசி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கோலியின் சைகை
நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 28 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசி 49 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு பின்னால் களமிறங்கிய சூர்யகுமார் யாதவால் கூட அரைசதம் விளாச முடிந்தது. ஆனால், கோலி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.

டிகேக்கு சிக்னல்
இதற்கு முக்கிய காரணம் தான் அரைசதம் விளாசுவதைவிட அணியின் ஸ்கோர் அதிகரிப்பதே முக்கியம் என அவர் உணர்ந்ததால்தான். கடைசி ஓவர் நடந்துகொண்டிருந்தபோது கோலி அரைசதம் எடுக்க ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக் அதிரடியாக பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தார். கோலி தன்னுடைய ஸ்ட்ரைக்கை மாற்றிவிடுமாறு கேட்காமல் தினேஷ் கார்த்திக்கிடம் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசுமாறு சைகை காட்டினார்.

அமைதியான கோலி
இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் கோலியை கொண்டாடி வருகின்றனர். ஆசிய கோப்பையில் இருந்தே கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அவரிடம் பழைய ஆக்கிரோஷமும் அவசரமும் இல்லை. அமைதியும் நிதானமும் தெரிகிறது. இதுதான் அவரை தற்போது நிலையான ஆட்டத்தை ஆட வைத்திருக்கிறது. அவரது ஆக்கிரோஷத்தால் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் கூட அவரை தற்போது பாராட்டத் தொடங்கி இருக்கின்றனர்.