தூய்மை இந்தியா திட்டத்தின் மீது ஈர்ப்பு... மகளுக்கு ‘தூய்மை’ எனப் பேர் வைத்து மஹா. பெற்றோர் அசத்தல்!
மும்பை: மஹாராஷ்டிராவில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தூய்மை எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது கனவினை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தது. பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டை தூய்மையாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைக்கு “ஸ்வச்சத்தா’ (தூய்மை) எனப் பெயரிட்டுள்ளனர்.
லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெற்றோரின் பெயர் மோகன் குரில் - காஜல் ஆகும். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு நேற்று முன்தினம் பேர் சூட்டும் விழா நடைபெற்றது.
மோகனும், காஜலும் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்கள். எனவே, தங்களது மகளுக்கு அவர்கள் தூய்மை எனப் பொருள் படும் வகையில், 'ஸ்வச்சத்தா’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பேர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மகளுக்கு தூய்மை எனப் பெயரிட்ட மோகன் - காஜல் தம்பதிக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!