For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியவர்களா நரசிம்ம ராவும் மன்மோகனும்?

By R Mani
Google Oneindia Tamil News

பிரதமர் நரசிம்ம ராவும், நிதியமைச்சர் டாக்டர் மன்மோஹன் சிங்கும் பொருளாதார பேரழிவிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்தனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமீபத்திய புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

‘டூ தி பிரிங்க் அண்டு பேக்' (பேரழிவின் முனைக்குப் போய் திரும்பி வந்தது') என்ற தலைப்பில் நரசிம்மராவைப் பற்றி ஒரு அற்புதமான புத்தகத்தை ஜெய்ராம் ரமேஷ் எழுதியிருக்கிறார்.

1991 ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நரசிம்ம ராவ் யாருமே எதிர்பாராத வகையில் பிரதமரானதையும், அன்றைக்கு நாடு இருந்த மிகவும் இக்கட்டான பொருளாதார சூழலில் டாக்டர் மன்மோஹன் சிங் மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றதையும், இந்த இருவர் கூட்டணி எவ்வாறு புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நாட்டைப் பேரழிவிலிருந்து மீட்டெடுத் தது என்பதையும் நேர்த்தியாக விவரித்திருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.

Narasimha Rao and Manmohan saved India from a big disaster?

இப் புத்தகம் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

"நிச்சயமாகச் சொல்லலாம், மிகப் பெரிய சவால்களை நரசிம்மராவ் சந்தித்தார். ஆனால் அவரை அருகிலிருந்து பார்த்தபோது அவர் ஓர் அற்புதமான, பிரகாசமான ஆளுமை கொண்ட மனிதராக இருந்தார். எந்தவிதமான ரிஸ்கும் வாழ்க்கையில் எடுக்காமல் இருந்த ஒருவர் மிகப்பெரிய துணிச்சல்காரராக உருவெடுத்ததை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

1991 ல் நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. 1991 ம் ஆண்டென்பது இந்திய வரலாற்றில் மிகவும் இக்கட்டான காலகட்டம். நாடு பொருளாதார பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட சில நாட்களுக்கு மட்டுமே எஞ்சியிருந்தது. பணவீக்கம் 16 சதவிகிதமாக இருந்தது. நரசிம்மராவ் நல்ல உடல்நிலையில் இல்லை. 1991 தேர்தலில் அவர் போட்டியிடவுமில்லை. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் இளம் தலைவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டிருந்தார். அந்த பேரதிரச்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி மீளுவதற்குப் போராடிக் கொண்டிருந்தது. ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பில் ராவ் வெற்றிப் பெற்றார், பல எதிர்கட்சிகள் வாக்கெடுப்பில் வெளிநடப்பு செய்ததால் இது சாத்தியமானது.

பிரதமராக வந்து விட்டாலும், தன்னை எதிர்த்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவரை தனது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக ராவ் சேர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது (ஷரத்பவார்). காஷ்மீரும், பஞ்சாபும் பற்றியெறிந்து கொண்டிருந்தன. நிர்தாட்சண்யமான ஒரு தலைமைத் தலைமை தேர்தல் ஆணையர் அரசுக்கு நிரம்ப தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையான கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு சிதறிக் கொண்டிருந்தது. மற்றோர் கூட்டாளியான தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் தலைவர் (ஜெயலலிதா) காவிரி விவகாரத்தில் தனது நாடகத் தன்மையான நடவடிக்கைகளால் பெருந் தலைவலியை ராவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ஆரம்பம் முதலே ராவ் அசாத்திய துணிச்சலுடன், வித்தியாசமான கோணத்திலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரது முதல் மாஸ்டர் ஸ்ட்ரோக், அரசியலுக்கு வெளியிலிருந்து ஒருவரை மத்திய நிதியமைச்சராகக் கொண்டு வந்தது தான். பொருளாதார நிபுனரான டாக்ரடர் மன்மோஹன் சிங், ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக ஆனார். பல சீர்திருத்த நடவடிக்கைகள் துவங்கின. இவற்றின் பலன்கள் 1993 வாக்கிலேயே தெரியத் துவங்கின.

அந்த கடுமையான பொருளாதார மாற்றங்கள் செய்யத் துவங்கிய போதே ராவ் மன்மோஹனிடம் சொன்னது , ‘இந்த பெரிய பந்தயத்தில் தோற்றுப் போனால் பழி உங்கள் மீது மட்டுமே விழும், வெற்றிப் பெற்றால் அது நம் அனைவரையும் சாரும்!'

ராவை முடிவுகள் எதுவும் எடுக்காமல் இருப்பவர் என்று பலரும் கேலியும், கிண்டலும் செய்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் உரிய முடிவுகளை எடுப்பதில் அவர் என்றுமே தவறியதில்லை. இருந்த போதிலும், அவர் மீதான ஒரு விமர்சனம், ‘எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே சிறந்த முடிவு' என்று ராவே ஒரு முறை கூறியது சில விஷயங்களில் உண்மைதான் என்ற போதிலும் இது பல பரிமாணங்களிலும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு முக்கியமான நிகழ்வு காங்கிரசில் அனேகமாக அனைவரிடமிருந்தும் நிரந்தரமாக ராவை தனிமைப் படுத்தியது. அது 1992 டிசம்பர் 6 ல் நிகழ்ந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு. இது ராவுக்கு தெரிந்தே நடந்தது என்றே பல காங்கிரஸ் தலைவர்களும் நம்பினர், இன்றும் நம்புகின்றன்றனர். நிரம்ப படித்தவர். இவரது வார்த்தைகளை பிரதமர் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் செவி மடுத்துக் கேட்டனர். தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் சரளமாக எழுத, பேசத் தெரிந்தவர். ஃபார்சி, அரபிக், ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளுடனும் பரிச்சயம் உண்டு..."

Narasimha Rao and Manmohan saved India from a big disaster?

தனது புத்தகத்தில் அந்த ஆரம்ப நாட்களில் டாக்டர் மன்மோஹன் சிங்கின் பங்களிப்பு பற்றியும், ஜெய்ராம் ரமேஷ் சொல்லியிருப்பது முக்கியமானது.

ஜெய்ராம் ரமேஷ் இப்படி எழுதியிருக்கிறார்...

"அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்ற மன்மோஹன் சிங் கின் யோசனையை ராவ் ஏற்றுக் கொண்டார். இதில் மன்மோஹன் சிங் கிற்கு இருந்த ஒரு தனிப்பட்ட சங்கடம் இது. மன்மோஹன் சிங் 1987 - 90 ல் சவுத் கமிஷன் எனப்படும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் விவகாரங்களை கவனிக்கும் சர்வதேச அமைப்பில் உயர் பதவியில் இருந்தார். இதனால் அவருக்கு மிகப் பெரிய ஊதியம் டாலர்களாக கிடைத்தது. அது அவரது வங்கிக் கணக்கில் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பைக் கணிசமாக குறைத்த போது மன்மோஹன் சிங் கின் வங்கிப் பண கையிருப்பு அபரிதமாக வளர்ந்து விட்டது. ஆனால் இந்த லாபத்தை தனக்கு வேண்டாமென்று மன்மோஹன் சிங் முடிவு செய்தார். காரணம் தனக்கு இது அவப் பெயரை உண்டாக்கி விடுமென்று அவர் நம்பினார். ஆகவே இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்ததால் தனக்கு கிடைத்த மிகப் பெரிய லாபத்தை அப்படியே பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு மன்மோஹன் சிங் அளித்து விட்டார்.

நரசிம்ம ராவின் வாழ்க்கையில் முக்கியமான நாள் ஜனவரி 24, 1998. அன்று காங்கிரஸ் தனது மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அப்போதுதான் அந்த தேர்தலில் ராவ் போட்டியிட மாட்டாரென்று காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அறிவித்தார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராவ் ஒதுக்கப் பட்டதே முக்கியத் தலைப்புச் செய்தியானது.

மோடியைப் போல தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமரல்ல நரசிம்ம ராவ். அவர் என்றுமே ஒரு புதிரான மனிதராகவே இருப்பார். வரலாறு அவரை இன்னமும் கனிவாகவே எடை போடும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் 1991 ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த நிலைமையை நினைத்துப் பார்த்தால் மட்டுமே எத்தகையதொரு பேரபாயத்திலிருந்து நாட்டை அவர் மீட்டெடுத்தார் என்பது புலப்படும். நரசிம்ம ராவும், டாக்டர் மன்மோஹன் சிங்கும் இல்லையென்றால் இந்தியா மற்றோர் கிரீஸாக உருவெடுத்திருக்கும்!"

ஒப்புக் கொள்கிறீர்களா?

-ஆர்.மணி

English summary
Columnist R Mani has gave the excerpts from Jairam Ramesh's recent book on Narasimha Rao and Dr Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X