காவி உடையில் ஆபாசம்.. மகளுடன் படத்தை பார்க்க முடியுமா ஷாருக்கான்.. ம.பி. சபாநாயகர் கேள்வி
சிம்லா: ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள காவி நிறத்திலான ஆடைக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பதான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

கவர்ச்சியாக நடனம் ஆடிய தீபிகா படுகோனே
பதான் திரைப்பத்தில் இடம் பெற்றுள்ள 'பேஷரம் ரங்' கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் பாடலை தற்போது வரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் காட்சியில் இடம் பிடித்துள்ள சில காட்சிகள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன. பாடலில் கவர்ச்சியாக நடனம் ஆடும் தீபிகா படுகோன் காவி நிறத்தில் ஆன உடையை அணிந்து இருந்தார். ஷாருக்கானுடன் நெருக்கமான காட்சிகளில் ஆடும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில்
இந்து துறவிகள், சாமியார்கள் அணியும் காவி நிறத்தில் ஆன உடையை அணிந்து கொண்டு இதுபோல கவர்ச்சி நடனத்திற்கு பயன்படுத்த வேண்டுமா? என எதிர்ப்புக்குரல்கள் கொடுத்துள்ள இந்துத்வா அமைப்புகள், பதான் திரைப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இந்தப் பாடல் காட்சிகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் இந்துத்வா ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

காட்சிகளை நீக்க வேண்டும்
மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பதான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை மாற்றாவிட்டால் மத்திய பிரதேசத்தில் படத்தை வெளியிட அனுமதி மறுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதேபோல், இந்துத்வா அமைப்புகள் பலவும் தொடர்ந்து பதான் திரைப்படத்தில் உள்ள பாடல் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகின்றன.

மகளுடன் பார்க்க வேண்டும்
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில சபாநாயகர் கிரிஷ் கவுதம், பதான் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கிரிஷ் கவுதம் கூறுகையில், ஷாருக்கான் இந்த படத்தை தனது மகளுடன் பார்க்க வேண்டும். தனது மகளுடன் படத்தை பார்ப்பதாக படத்தையும் வெளியிட்டு உலகத்திற்கு சொல்ல வேண்டும். இறைதூதர் குறித்தும் இப்படி ஒரு படத்தை எடுத்து ஓட விடுங்கள் பார்க்கலாம் என நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன்" என்றார்.

பதான் திரைப்டத்திற்கு எதிராக குரல்
மத்திய பிரதேச மாநில சட்டமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடியது. 5 நாட்கள் இந்தக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பதான் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக அவையில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான கோவிந்த் சிங்கும் பதான் திரைப்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications