For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு நடத்த முடியாது! - குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு நடத்த முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

67வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை ஆற்றிய உரை:

Peace cannot be discussed under shower of bullets: President Pranab Mukherjee

67-வது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்திய குடிமக்களுக்கும், நமது ராணுவப்படைகள், துணை ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாக தற்போது விளங்கி வருகிறது. தாங்கள் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விலகி இருக்கிறோம் என எந்தவொரு நாடும் கூற முடியாத அளவுக்கு, புற்றுநோய் போல பயங்கரவாதம் பரவிக் கிடக்கிறது. பயங்கரவாதத்தை நன்மை - தீமை எனப் பிரித்துப் பார்க்க முடியாது. பயங்கரவாதம் எந்த நிலையில் தோன்றினாலும், அப்பாவி மக்களைப் பலி கொடுப்பதே அதன் அடிப்படை சித்தாந்தம் ஆகும்.

அமைதிக்கு எதிரான கீழ்த்தரமான கொள்கைகளால் உருவாக்கப்பட்டு, வெறுப்புணர்வுகளால் ஊக்குவிக்கப்படுவதே பயங்கரவாதம். புற்றுநோய் போன்று வளர்ந்து வரும் இத்தகைய பயங்கரவாதத்தை ஆணிவேருடன் அறுத்தெரிய உலக நாடுகள் உறுதியேற்க வேண்டும்.

இதற்கு உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக அணி திரள வேண்டியது அவசியம். அப்பாவி மக்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற போரைத் தொடங்கியுள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க மக்களும் ஒன்று திரள வேண்டும்.

பேச்சு சாத்தியமில்லை...: அனைத்து விவகாரங்களிலும் ஒட்டுமொத்த நாடுகளும் ஒத்துப்போகும் எனக் கூற முடியாது. எந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதே சமயத்தில், குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு என்பது சாத்தியப்படாது.

உலகப் பொருளதார சக்தி

இந்தியா குடியரசு நாடாக அங்கீகரிக்கப்பட்ட 1950-ஆம் ஆண்டில் நம் நாட்டின் நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால், நமது அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த தலைவர்களாலும், நாட்டு மக்களின் உழைப்பாலும் இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.

பல்வேறு காரணங்களால் உலகப் பொருளாதார நிலைமை ஸ்திரத்தன்மையற்று விளங்குகிறது. இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் ஆட்டம் காணாதது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

வெள்ளமும் வறட்சியும்

கடந்த 2015-ஆம் ஆண்டு என்பது இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக விளங்கியது. ஒருபுறம் கடும் வறட்சி, மறுபுறம் கட்டற்ற வெள்ளம் என நாடே இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. எனினும், நாட்டின் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் நிலையான வளர்ச்சியைக் கண்கூடாக காண முடிந்தது. இது மிகவும் பாராட்டத்தக்கது.

நாட்டு மக்கள் நலனுக்காக இயற்றப்படும் சட்டங்கள் உரிய காலத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அதன் முழுப் பலனும் மக்களைச் சென்றடையாது. இதுபோன்ற சட்டங்களை இயற்றும்போது, அனைவரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது என்பது அரசின் கடமையாகும். அவ்வாறு இல்லாமல், முடிவெடுப்பதிலும், சட்டத்தை அமல்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுவது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது.

மாறுபட்ட சிந்தனை

இன்றைய தொழில்துறையின் வளர்ச்சிக்கு வழக்கமான சிந்தனையை விட, மாறுபட்ட சிந்தனையே தேவைப்படுகிறது. அந்த வகையில், நம் நாட்டின் கல்வி கற்பிக்கும் முறைகளும் மாற வேண்டும். நமது கல்வித்தரமும் சர்வதேச தரத்துக்கு மேம்பட வேண்டும்.

அதேபோல், பெண்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு மேம்பட்ட சமூகமாக இந்தியா விளங்க வேண்டும் என தனது உரையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

English summary
President Pranab Mukherjee on Monday said peace cannot be discussed under a shower of bullets, a remark held significant against the backdrop of the Pathankot attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X