For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் நாய்தான்.. ஆனால் திருடனைப் பார்த்துதான் நாய் குரைக்கும்.. ராம்ஜெத்மலானி.. சில நினைவலைகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ram Jethmalani மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்

    - ஆர்.மணி

    சென்னை: இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞரும், ஆறு முறை ராஜ்ய சபா எம்.பி யுமான ராம்ஜெத்மலானி காலமாகி விட்டார். அவருக்கு வயது 95.

    ராம்ஜெத்மலானி இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இன்னும் ஆறு நாட்களில் அவர் தன்னுடைய 96 வது பிறந்து நாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் டில்லியில் உள்ள அவருடையை வீட்டில் காலமானார். ராம்ஜெத்மலானியின் மரணத்தை உறுதி செய்த அவருடைய மகனும், மூத்த வழக்கறிஞரும், பாஜக தலைவருமான மஹேஷ் ஜெத்மலானி கடந்த சில நாட்களாகவே தன்னுடைய தந்தை வயோதிகத்தின் காரணமான பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டிருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ram jethmalani obituary

    ராம்ஜெத்மலானி 1998 மற்றும் 1999 ம் ஆண்டு காலகட்டத்தில் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சட்ட அமைச்சராக இருந்திருக்கிறார். பின்னர் வாஜ்பாயுடன் அவருக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார். அப்போதய இந்திய தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) சோலி சொராப்ஜி பற்றி ராம்ஜெத்மலானி தெரிவித்த கருத்துக்களால் நீதித்துறையுடன் மத்திய அரசுக்கு மோதல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக மறைமுகமாக வாஜ்பாய் கொடுத்த கண்டனங்களால் ராம்ஜெத்மலானி ராஜினாமா செய்தார். இதற்கு பதிலடியாக 2004 மக்களவை தேர்தலில் வாஜ்பாய் போட்டியிட்ட உத்திர பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் வாஜ்பாய்க்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு தோற்றுப் போனார்.
    செப்டம்பர் 14, 1923 ம் ஆண்டு தற்போது பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் பிறந்தவர் ராம்ஜெத்மலானி. 17 வயதில் சட்டப்படிப்பு முடித்து பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் துவங்கினார் ராம்ஜெத்மலானி.

    1947 ல் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பெருங் கலவரத்திலிருந்து தப்பிப் பிழைத்து தற்போதய மும்பைக்கு வந்தார். அப்போது ராம்ஜெத்மலானியிடம் இருந்தது வெறும் ஒரு ரூபாய்தான். மும்பை உயர்நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். "நான் பாம்பேவுக்கு பாகிஸ்தானிலிருந்து தப்பி பிழைத்து ஓடி வந்த லட்சக்கணக்கான ஹிந்துக்களில் ஒருவன். பாம்பே வந்த போது என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்தது வெறும் ஒற்றை ரூபாய்தான்" என்று பிற்காலத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்து போய் பேசும் போது கூறினார் ராம்ஜெத்மலானி.

    ram jethmalani obituary

    ராம்ஜெத்மலானியின் சட்டப்பணி என்பது சுதந்திர இந்தியாவின் சட்ட மற்றும் அரசியல் வரலாற்றில் மிகவும் வண்ணமயமானது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் மிக முக்கியமான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பல துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என்று பலருக்காகவும் நாட்டின் அனைத்து உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் ராம்ஜெத்மலானி. பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்ககப்பட்ட ஒருவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி காப்பாற்றியிருக்கிறார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை தூக்கிலிட 2011 ஆகஸ்டில் அன்றைய மன்மோஹன் சிங் அரசு முடிவு செய்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகனுக்காக ஆஜராகி தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை வாங்கியது ராம்ஜெத்மலானிதான். சதீஷ்கர் மாநிலத்தில் மலைவாழ் மக்களிடம் பணியாற்றிய மருத்துவர் டாக்டர் பினாயக் சென்னுக்கு தேசதுரோக வழக்கில் அம் மாநில உயர்நீதி மன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பினாயக் சென்னுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் ராம்ஜெத்மலானி.

    ஜெயின் ஹவாலா வழக்கில் எல்.கே. அத்வானிக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தது, ஷோராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் இன்றைய உள்துறை அமைச்சர் அமீத் ஷா வுக்கு விடுதலை வாங்கி கொடுத்தது, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவுக்காக வாதாடி, கீழமை நீதிமன்றம் விதித்திருந்த நான்காண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்து மறைந்த தமிழக முதலமைச்சரை காப்பாற்றியது என்று ராம்ஜெத்மலானியின் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    ram jethmalani obituary

    ராம்ஜெத்மலானி தோற்றுப் போன வழக்குகளுக்கும் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். பங்கு சந்தை ஊழல் மன்னண் ஹர்ஷத் மேத்தா, 2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய கனிமொழி, சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட மறைந்த காஞ்சி சங்கராச்சிரியார் ஜெயேந்திரர், பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த பிரேமானந்தா சுவாமி, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னையை சேர்ந்த அயோத்தியா குப்பம் வீரமணி என்று இந்தப் பட்டியலையும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்தான்.

    ராம்ஜெத்மலானி மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனம் அவர் எப்போதுமே கடத்தல்காரர்கள், கொலை காரர்களாக குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், நாடே காறி உமிழும் குற்றச் சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்காக மட்டுமே ஆஜராகி வாதாடுகிறார் என்பதுதான். கடத்தல்காரராக அறியப்பட்ட ஹாஜி மஸ்தானுக்காக ஒரு முறை ராம்ஜெத்மலானி ஆஜரானார். அப்போது இந்த குற்றச் சாட்டு எழுந்த போது ராம்ஜெத்மலானி இப்படி சொன்னார்; "ஒரு வழக்கறிஞர் தன்னிடம் வரும் எந்த ஒரு வழக்கையும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. நான் ஒருவேளை இப்படிப் பட்ட கொடுங்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்காக ஆஜராகவில்லை என்றால் நீதிமன்றமே இலவச சட்ட மையத்தின் மூலமோ அல்லது வேறு வகையிலோ குற்றம் சாட்டப் பட்டவருக்காக ஒரு வழக்கறிஞரை நியமித்து வாதாட சொல்லும். இது என்னுடைய தொழில் தர்மம்".

    ராம்ஜெத்மலானியை பற்றிய பல விஷயங்கள் ஒரு செய்தியாளனாக என்னுடைய நினைவலைகளில் நிழலாடுகின்றன. 1988 ம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது ராம்ஜெத்மலானி ராஜீவ் காந்தி மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி பேசி வந்தார். ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தி, 'நான் குறைக்கும் நாய்களுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன்' (I am not going to answer for barking dogs) என்று சொன்னார். அதற்கு ராம்ஜெத்மலானி இப்படி பதில் சொன்னார்; 'ஆம். நான் குறைக்கும் நாய்தான். திருடர்களை பார்த்து குரைக்கும் நாய்' (Yes. I am a barking dog. But dogs do bark at thieves).

    செப்படம்பர் 9 ம் தேதி, 2017 ல் தான் வழக்கறிஞர் தொழிலிருந்து ஓய்வு பெறுவதாக ராம்ஜெத்மலானி அறிவித்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் அப்போதய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் அமர்வின் முன்பு ராம்ஜெத்மலானி ஆஜரானார். ராம்ஜெத்மலானியை பார்த்த தலைமை நீதிபதி நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்? (when are you going to retire?) என்று கேட்டார். அதற்கு இப்படி பதில் சொன்னார் ராம்ஜெத்மலானி, 'நான் எப்போது சாகப் போகிறேன் என்று ஏன் கேட்கிறீர்கள்? (Why my Lord is asking when I am going to die?")

    1995 ம் ஆண்டு 'பவித்திர ஹந்துஸ்தான் கழகம்' என்று ஒரு அரசியல் கட்சியை ராம்ஜெத்மலானி தொடங்கினார். பின்னர் சில ஆண்டுகளில் அந்தக் கட்சிக்கு ராம்ஜெத்மலானி மூடு விழா நடத்தினார். ஒரு முறை சென்னையில் அவரை இந்த கட்டுரையாளர் பேட்டியெடுத்த போது ராம்ஜெத்மலானி இவ்வாறு சொன்னார்; "எனக்கு வரும் வழக்குகளில் 90 சதவிகித வழக்குகளை நான் தோற்கிறேன். ஆனாலும் தங்கள் வழக்குகளுக்காக என்னை வாதாட அழைப்பவர்களின் எண்ணிக்கையில் எந்தக் குறைவுமில்லை".

    எந்த ஒரு அரசியல் மற்றும் சட்ட மாணவனுக்கும் ராம்ஜெத்மலானியின் வாழ்கை பயணம், கடந்து போக முடியாத, கண்டிப்பாக ஊன்றி பார்த்தும், படித்தும் உணர வேண்டிய வாழ்கைப் பயணம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி யாராவது ராம்ஜெத்மலானியின் வாழ்கை பயணத்தை படிக்காமல் கடந்த போனால் நஷ்டம் அந்த மாணவனுக்குத்தான். ராம்ஜெத்மலானிக்கு அதில் எந்த நஷ்டமும் இல்லை.

    English summary
    Ram Jethmalani is no more. He was one of the Leagl luminaries of the coutry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X