For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

SC strikes down Section 66A of IT Act which allowed arrests for objectionable content online

சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.

இதன் பின்னர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.

இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை. அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.

இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது என்று கூறினர்.

யார் யார்?

இந்த 66-ஏ பிரிவின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி குறித்து கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ததற்காக ஜதவ்பூர் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, சுப்ரதா சென்குபா ஆகியோர் கைது செய்யபட்டனர். ஆனால் இவர்களை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததுடன் இருவருக்கும் தலா ரூ50 ஆயிரம் நட்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

இதேபோல் நாடாளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் கார்ட்டூன் போட்டதாக அசீம் திரிவேதி இதே 66-ஏ பிரிவின் கீழ் மும்பையில் கைது செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் பற்றி சில ஜோக்குகளை வெளியிட்டதற்காக ஏர் இந்தியாவின் ஊழியர்கள் இருவ ர்கைது செய்யப்பட்டனர். பின்னர் சில மாதங்கள் கழித்து இருவர் மீதான குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது.

2013ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் கன்வால் பார்தி, 2014-ல் கேரளாவில் ராஜேஷ் குமார் ஆகியோரும் 66-ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை மிகவும் அதிகமாக அச்சுறுத்தி வந்த இந்த 66-ஏ பிரிவை உச்சநீதிமன்றம் அடியோடு ரத்து செய்து கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டியிருப்பதை வலைவாசிகள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

English summary
The Supreme Court on Tuesday declared Section 66A of Information Technology Act as unconstitutional and struck it dow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X