இதுதான் இந்தியா: 15 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து பெண்..ராஜஸ்தான் ராமநவமி ஊர்வல கலவரத்தில் துணிச்சல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கரவ்ளியில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் சிங்கப்பெண்ணாக மாறி 15 முஸ்லிம்களை இந்து பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா உள்பட வேறு சில மாநிலங்களிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன. சில இடங்களில் வன்முறை வெடித்தன.
இந்நிலையில் தான் இந்து பெண் ஒருவர் 15 முஸ்லிம் வியாபாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சம்பவம் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரவ்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

ராஜஸ்தானில் கலவரம்
ராஜஸ்தான் மாநிலம் கரவ்ளி சந்தை பகுதியில் ஏப்ரல் 2ம் தேதி ராமநவமி ஊர்வலம் நடந்தது. இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் சுமார் 35 பேர் காயமடைந்தனர்.

முஸ்லிம் வியாபாரிகளுக்கு அடைக்கலம்
இதனால் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் அருகே உள்ள கடைகள், வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் தான் சந்தையில் துணிக்கடை வைத்திருக்கும் மதுலிகா ராஜ்புட் எனும் 48 வயது இந்து பெண், 15 முஸ்லிம் வியாபாரிகளை தனி ஆளாக நின்று காப்பாற்றியுள்ளார். அதாவது கலவரத்தில் இருந்து தப்பிக்க ஓடிய இந்த 15 வியாபாரிகளும் பாதுகாப்புக்காக மதுலிகாவின் கடைக்கு சென்றனர். அவர்களுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார்.

டீ வழங்கி உபசரிப்பு
இதுபற்றி அறிந்த நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இதை தனிஆளாக சிங்கப்பெண்ணாய் மாறி மதுலிகா ராஜ்புட் தடுத்துள்ளார். மேலும் 15 வியாபாரிகளுக்கும் அவர் குடிநீர், டீ வழங்கி உபசரித்துள்ளார். மதுலிகா ராஜ்புட்டின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். 2 குழந்கைள் உள்ள நிலையில் அவர் துணிக்கடை நடத்தி வருகிறார். தற்போது மதுலிகாவின் துணிகர செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மதத்தை விட மனிதநேயம் தான் பெரியது
இதுபற்றி மதுலிகா கூறுகையில், ‛‛திடீரென சந்தையில் உள்ள கடைகளின் கதவுகளை அனைவரும் அடைத்தனர். சில கடைகள் தீப்பிடித்து எரிந்தன. மோதலில் பாதுகாப்புக்காக ஓடிவந்தவர்களை வீட்டில் அடைத்து வைத்து பாதுகாத்தேன். ஏனென்றால் அவர்கள் வெளியில் இருந்து நிச்சயம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பார்கள். இந்த சந்தை பகுதியில் ஆண்டாண்டு காலமாக இந்து, முஸ்லிம்கள் சேர்ந்து தான் தொழில் செய்து வருகிறோம். மதங்களை காட்டிலும் மனிதநேயம் தான் பெரியது. இதனால் தான் அவர்களை காப்பாற்றினேன்'' என்றார். இந்த கலவரம் நடந்த கரவ்ளியில் தற்போது வரை பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications