மார்பகம் வளர்ச்சி இல்லாவிட்டாலும் குற்றம் குற்றமே! பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தா: ‛‛மார்பகம் வளர்ச்சி இல்லாவிட்டாலும் குற்றம் குற்றமே. பாலியல் நோக்கத்துடன் அந்தரங்க பகுதிகளை தொடுவதும் குற்றம் தான்'' என குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு சரிதான் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 2017ம் ஆண்டில் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு அருகே வசிக்கும் நபர் அவரது வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததால் அவர் சிறுமியின் கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார். மேலும் அவர் மார்பக பகுதியை தொட்டதாக கூறப்படுகிறது.

போக்சோ வழக்கில் கைது
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்தநபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு 2017 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கை ரத்து செய்ய...
இந்த வழக்கின்போது மருத்துவ அதிகாரி சாட்சியமளித்தார். அதில் பாதிக்கப்பட்டவரின் மார்பகங்கள் வளரவில்லை என தெரிவித்துள்ளார். இதை காரணமாக கூறி தன்மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்தநபர் நீதிமன்றத்தில் கூறினார். அதாவது மார்பக பகுதி வளர்ச்சியடையாததால் இது பாலியல் சீண்டலாக இருக்காது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

முத்தமிடுவதன் அவசியம்
இந்த வழக்கை நீதிபதி பிபேக் சவுத்ரி விசாரித்து தீர்ப்பு கூறினார். அப்போது,‛‛இந்த வழக்கில் மார்பகங்கள் வளர்ந்து இருந்ததா என்பது முக்கியமல்ல. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடலின் பல்வேறு பாகங்களை தொட்டு முத்தமிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது அத்துமீறி நுழைந்த நபர் ஏன் சிறுமிக்கு முத்தமிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

சரிதான் என தீர்ப்பு
மேலும் உடலுறவு இல்லாவிட்டாலும் கூட அந்தரங்க பகுதிகளை தொடுவது என்பது பாலியல் ரீதியான சீண்டலாக தான் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் குற்றம்சாட்டப்பட்ட நபரின் பாலியல் சீண்டலை புரிந்து கொள்ள முடியும். இதனால் அவரை போக்சோவில் கைது செய்தது சரிதான்'' என கூறி தீர்ப்பு வழங்கினார்.












Click it and Unblock the Notifications