சொந்த தொகுதியில் அதிர்ச்சி.. பாஜக வேட்பாளரை விரட்டியடித்த பொதுமக்கள்.. பரபரக்கும் குஜராத் தேர்தல்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்து பாஜகவுக்கு தாவிய அஸ்வின் கோட்வால் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் தனது சொந்த தொகுதியின் கிராம மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்.
மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 1ம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் கேத்பிரம்மா மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு விரட்டியடித்துள்ளனர்.

கேத்பிரம்மா
குஜராத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானதாகவும். குஜராத் மாடலை வைத்துதான் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குகளை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்நிலையில், தற்போது தேர்தலில் கோட்டை விட்டுவிட்டால் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பலத்த அடி விழும் என்பதை பாஜக புரிந்து வைத்திருக்கிறது. எனவே இதில் வெற்றி பெற கடும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. ஆனால் இவ்வாறு வந்த எம்எல்ஏக்களுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இப்படி வந்த எம்எல்ஏக்களில் ஒருவர்தான் கேத்பிரம்மா தொகுதி எம்எல்ஏ அஸ்வின் கோட்வால்.

பாஜக சார்பில்
கோட்வால் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயராகும். கேத்பிரம்மா மாவட்டத்தில் இந்த சமூக மக்கள்தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பிராதன தொகுதியான கேத்பிரம்மா தொகுதியை பொறுத்த அளவில் கடந்த 1995ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் கடந்த 2007 முதல் 2017 வரை காங்கிரஸ் சார்பில் அஸ்வின் கோட்வால் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் 2017க்கு பிறகு கட்சி தாவி இந்த முறை பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவ்வாறு இருக்கையில் தேர்தலையொட்டி அஸ்வின் கோட்வால் பிரசாரத்திற்கு சென்றுள்ளார்.

ஆவேசம்
கேத்பிரம்மா மாவட்டத்தின் விஜயநகர் தாலுகாவில் உள்ள ஜோரவர்நகர் கிராமத்தில் இன்று காலை இவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது இவருக்கு கடுமையான எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பிரசாரத்தில் இவர் பேசிக்கொண்டிருக்கையில் நடுவில் ஊர் மக்கள் சிலர் எழுந்து தங்கள் கிராமத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளோ, திட்ட பணிகளோ எதுவும் நடைபெறவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அஸ்வின் கோட்வால் கேள்வியெழுப்பிய கிராம மக்களை பார்த்து ஆவேசமாக, "நான் ஒன்றும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கடமைபட்டிருக்கவில்லை" என்று கூறி பரப்புரையை புறக்கணித்து அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார். இது அக்கூட்டத்தில் மட்டுமின்றி மாநில அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் வாழ்க்கை
மற்ற எம்எல்ஏக்களை போல அஸ்வின் கோட்வால் திடீரென அரசியலுக்கு வந்துவிடவில்லை. இவரது தந்தை 'லக்ஷ்மன்பாய்' பழங்குடி சமூகத்தின் தலைவராக இருந்துள்ளார். இவர்தான் அஸ்வினின் 'ரோல் மாடல்'. இவரை பார்த்துதான் அஸ்வின் அரசியலுக்கு வந்தார். 12ம் வகுப்பு படிக்கும் போதே அஸ்வின் இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற தொடங்கியவர். பின்னர் படிப்படியாக வளர்ந்து இவரும் பழங்குடி சமூகத்தின் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 2007ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுதான் இவரின் முதல் வெற்றியாகும். அப்போதிலிருந்து இப்போது வரை மூன்று முறை தேர்தலில் வென்றிருக்கிறார். ஆனால் தற்போது பாஜகவுக்கு தாவி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications