
உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு! இரு துணை முதல்வர்களும் பதவியேற்கிறார்கள்
லக்னோ: உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது லோக்சபா எம்.பியாக உள்ளார். இரு துணை முதல்வர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் பாஜக மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பாஜக 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

இந்நிலையில் உத்தர பிரதேச, பாஜக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாாடு தலைமையில் கூடியது. இந்த ஆலோசனையில், கோரக்பூர் தொகுதியின் லோக்சபா பாஜக எம்.பியான யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய இணை அமைச்சர் மனோஜ்சின்கா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத், தீவிர வலதுசாரி இந்துத்துவா சிந்தனை கொண்டவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தவர். அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் தொகுதியிலிருந்து 5 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகி ஆதித்யநாத்.
மேலும் உ.பி. பாஜக தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜாதி பிரிவுகளை குஷிப்படுத்த இந்த துணை முதல்வர் தேர்வு பயன்பட்டதாக கூறப்படுகிறது.