ஆபரேஷன் சிந்தூரால் எல்லையில் பதற்றம்! ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல்? பிசிசிஐ எடுக்கும் மேஜர் முடிவு
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே பஞ்சாப் தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு சைரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசித்து வந்த அப்பாவி பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாக சொல்லப்பட்டது.

இந்தியா தாக்குதல்
இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அதற்கேற்ப நள்ளிரவில் பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஐபிஎல் போட்டிகள்
இந்த ஆபரேஷன் சந்தூரை தொடர்ந்து எல்லையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானுடன் மிகப் பெரியளவில் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. இதனால் அங்கு ஐபிஎல் போட்டிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. நாளைய தினம் பஞ்சாப்- டெல்லி அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ள நிலையில், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
சிக்கல்கள்
பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு வேறு இடத்தில் நடத்தச் சொல்லவில்லை என்றாலும் கூட அங்குப் போட்டி நடப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் எல்லையில் பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தர்மசாலா, ஜம்மு, ஸ்ரீநகர், லே, சண்டிகர், ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய ஏர்போர்ட்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே 10ம் தேதி அதிகாலை 5:30 மணி வரை ஏர்போர்ட் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் பாதிப்பு?
பஞ்சாப்- டெல்லி வீரர்கள் ஏற்கனவே தர்மசாலா சென்றுவிட்டனர். இருப்பினும், அடுத்து மே 11ம் தேதி நடைபெறும் போட்டியில் பஞ்சாப்பை மும்பை அணி எதிர்கொள்கிறது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் மும்பை அணியால் தர்மசாலா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சண்டிகர் வழியாகச் செல்லலாம் என்ற போதிலும், அந்த விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால் இப்போது டெல்லி சென்று அங்கிருந்து பஸ் மூலம் தர்மசாலா செல்வது மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது. இருப்பினும், அதுவும் கூட மும்பை அணிக்கு நீண்ட பயணமாகவே இருக்கும்.
மத்திய அரசு- பிசிசிஐ
போட்டிகள் தர்மசாலாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? இல்லை அட்டவணை மாற்றப்படுமா? இல்லை வேறு இடத்திற்குப் போட்டிகள் மொத்தமாக மாற்றப்படுமா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. மத்திய அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்க பிசிசிஐ முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அளிக்கும் தகவலைப் பொறுத்து பிசிசிஐ முடிவெடுக்கும்.
இதனால் ஐபிஎல் அணிகளிடம் இதுவரை பிசிசிஐ தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம். மத்திய அரசு விளக்கம் அளித்த பிறகே அது குறித்து போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications