மன்னித்துவிடுங்கள்.. நான் அப்படி செய்யாவிட்டால் துப்பாக்கி சப்தம் கேட்டிருக்கும்.. அஷ்ரப் கானி
காபூல்: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் காபூலை விட்டு வெளியேறியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்கள் , மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வந்தனர். இதையடுத்து காபூலை அடுத்த நகரத்தை அவர்கள் கைப்பற்றியவுடன் அடுத்த குறி தலைநகர் காபூல் என தெரியவந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்த தங்கள் நாட்டினரை இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீட்பு விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அது போல் அங்கிருந்த அமெரிக்க படைகளும் வெளியேறி வந்தன.

தலிபான்கள்
இந்த நிலையில் ஒரு நாள் திடீரென காபூலை நோக்கி தலிபான்கள் வந்தனர். அங்கு அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அதிபராக இருந்த அஷ்ரப் கானியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டிய தலிபான்கள் அவரை நாட்டை விட்டே வெளியேறுமாறு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து அவர் எங்கே போனார் என தெரியாத நிலை இருந்தது.

ஐக்கிய அரபு நாடுகள்
அவர் தஜிகிஸ்தான் சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவர் ஐக்கிய அரபு நாடுகளிடம் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு அரசு உறுதி செய்தது. இதையடுத்து அவர் ரத்த களறியை தவிர்க்கவே தான் நாட்டை வெளியேறியதாக கூறியிருந்தார். மேலும் அவர் ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் தப்பியோடியதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. இதை அஷ்ரப் கானி மறுத்தார்.

காபூலை விட்டு வெளியேறிய
இந்த நிலையில் தலிபான்களின் பிடியில் சிக்கிய ஆப்கான் மக்களுக்கு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் நான் காபூலை விட்டு வெளியேறிதயதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதை தடுக்கவே நான் காபூலில் இருந்து வெளியேறினேன்.

மில்லியன்
காபூலில் துப்பாக்கிகள் சப்தம் கேட்கக் கூடாது என்பதாலும் 6 மில்லியன் பேரை காக்கவும் நான் இப்படியான ஒரு முடிவை எடுத்தேன். ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூலுக்குள் தலிபான்கள் எதிர்பாராத நிலையில் உள்ளே நுழைந்த போது நான் ஏன் காபூலை விட்டு வெளியேறினேன் என்பதை ஆப்கான் மக்களுக்கு விளக்கிவிட்டேன். நீங்கள் வெளியே போகாவிட்டால் கடந்த 1990 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் வீதிக்கு வீதி நடந்த சண்டையை போல் மீண்டும் நடக்கும் என என்னை மிரட்டினர்.

ஐநா முடிவு
என் வாழ்க்கையில் மிகவும் கடினமான முடிவை எடுத்தது காபூலை விட்டு வெளியேறியதுதான். ஆனால் நான் சென்றதால்தான் காபூலில் துப்பாக்கி சப்தம் கேட்காமல் அமைதியாக இருக்கிறது என தெரிவித்தார் அஷ்ரப் கானி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு வரை ஆப்கான் அதிபராக இருந்தார். ஆப்கானிஸ்தானில் முல்லா முகமது ஹாசன் அக்குந்தின் ஆட்சி நடைபெறவுள்ளது. இவர் ஐநாவின் தடை பட்டியலில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications