மிகவும் மோசமான ஆப்கானிஸ்தான்.. காபூலை நெருங்கிய தலிபான்கள்.. வெளியேறும் இந்திய தூதரக அதிகாரிகள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலைமை வேகமாக மோசமாகி வருவதால் தலைநகர் காபூலில் இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்படுவர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த 24 மணி நேரத்தில் இதுகுறித்து முறையாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே தூதரக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள்.
காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேறுவதற்காக உரிய ஆவணங்களையும் மற்றவைகளையும் ஆப்கான் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்க படைகள்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிக் கொண்டு வருவதால் அங்கு தலிபான்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் ஒவ்வொரு மாகாண தலைநகரங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

தலைநகர் காபூல்
தலைநகர் காபூலையும் தலிபான்கள் நெருங்கி வருகிறார்கள். இதனால் இதற்கு மேல் இந்தியர்கள் காபூலில் உள்ள தூதரகத்தில் பணியாற்றுவது ஆபத்தைதான் ஏற்படுத்தும் என அரசு கருதுகிறது.

மத்திய அரசு
இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு காபூலில் உள்ள இந்திய தூதரத்தை உள்ளூர் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்துவர் என தெரிகிறது. இந்திய தூதரக அதிகாரிகளின் நலனை காப்பது இந்திய அரசின் கடமையாகும்.

காவல் நிலையங்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள் காலியாக இருப்பதால் பல்வேறு அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பு கருதி ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் வெளியேறுகிறார்கள். இன்று நள்ளிரவோ அல்லது நாளையோ தலிபான்கள் காபூலை கைப்பற்றக் கூடும் என தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஊடகத் துறையினர் உள்பட சர்வதேச அமைப்பினரும் தங்களை பாதுகாப்பாக ஆப்கானிலிருந்து வெளியேற்றுமாறு இந்திய அதிகாரிகளிடம் உதவி கேட்டு வருகிறார்கள்.

தலைநகர் காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கினால் அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற போதிய படைகளை காபூலுக்கு அனுப்புவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அது போல் பிரிட்டனும் தங்கள் நாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்ற 600 படைகளை அனுப்புகிறது.

வன்முறை அதிகரிப்பு
தலிபான்களால் பால்க் மாகாணத்தில் வன்முறை அதிகரித்ததை அடுத்து மசார் இ ஷெரீப்பில் உள்ள தூதரகத்திலிருந்து அதிகாரிகளை வெளியேற்றும் பணியில் இந்தியா கடந்த வாரம் முதலே ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருகிறது. தலிபான்கள் கடந்த சில தினங்களாக மாகாணங்களை கைப்பற்றும் முயற்சிகளில் முன்னேறி கொண்டே வருகிறார்கள். கந்தஹார் மற்றும் ஹெராட் ஆகிய இரு முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியது ஆப்கான் படைகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications