ரஷ்யாவின் 12 ஆயிரம் படை வீரர்கள் பலி.. நெஞ்சம் நிமிர்த்தி சொல்லும் உக்ரைன் ராணுவம்
கீவ்: போர் நடவடிக்கையை எதிர்த்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் 12 ஆயிரம் படை வீரர்கள் இறந்துள்ளதாகவும், 49 விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்று 15வது நாளாக போர் நடக்கிறது. இந்த போரில் ரஷ்யா வான்வழி தாக்குதலை தொடர்கிறது. ஏவுகணை, குண்டுவீச்சில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இதுமட்டுமின்றி இருநாட்டு வீரர்களும் பலியாவதோடு, உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர். இதில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்த்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவரும் பலியானார்.

ரஷ்யாவுக்கு சிரமம்
ரஷ்யாவுக்கு, உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. கீவ் நகரை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு முன்னேறும் ரஷ்ய வீரர்களை அவர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். மேலும் தாய் நாட்டை காக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளது உக்ரைன் ராணுவத்துக்கு கூடுதல் பலமாக உள்ளது. இது ரஷ்யாவுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவர்களின் போர் வியூகங்களுக்கு முட்டுகட்டை போட்டுள்ளது.

12 ஆயிரம் வீரர்கள் பலி
இந்நிலையில் ரஷ்யாவின் 12 ஆயிரம் படை வீரர்கள் பலியாகி உள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் கூறியதாக கீவ் இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 15 நாள் போரில் ரஷ்யாவின் 12 ஆயிரம் படை வீரர்கள் பலியாகி உள்ளனர். 49 விமானங்கள், 81ஹெலிகாப்டர்கள், 335 டாங்கிகள், வீழ்த்தப்பட்டுள்ளன. 1,132 பீரங்கிகள், 2 படகுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 1,105 ராணுவ வாகனங்கள், 60 எரிபொருள் தொட்டிகள், வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தும் 29 ஆயுதங்கள், 7 ஆளில்லா விமானங்கள்(டிரோன்) வீழ்த்தப்பட்டுள்ளன'' என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதை ரஷ்யா தரப்பில் உறுதி செய்யவில்லை.

10 லட்சம் மக்கள் வெளியேற்றம்
முன்னதாக போர் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டது. உக்ரைன் மக்கள் வெளியேற வசதியாக ரஷ்யாவும் சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தங்களை அறிவித்தது. இதன்மூலம் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகி உள்ளனர். இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறி உள்ளனர்.
Recommended Video

தொடரும் பேச்சுவார்த்தை
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தான் இன்று துருக்கியில் வைத்து உக்ரைன்-ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படவில்லை.












Click it and Unblock the Notifications