வௌவால்களில் இருந்தா? ஆய்வகத்தில் இருந்தா? கொரோனா தோற்றம் குறித்த அதிமுக்கிய தகவல்களை வெளியிட்ட சீனா
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாவதற்கு முன், சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
கொரோனா வைரசின் கோரப் பிடியில் உலகம் தற்போது சிக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உருமாறிய கொரோனா காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நேரத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்த தகவல்களை அறிந்துகொள்வது முக்கியமானதாக மாறியுள்ளது.

வல்லுநர் குழு ஆய்வு
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வல்லுநர் குழு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அமைத்தது. ஜனவரி மாதம் சீனா சென்ற அந்த வல்லுநர் குழு கொரோனா வைரசின் தோற்றம் குறித்த தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு சுருக்கங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. இருப்பினும், இந்த ஆய்வில் சீனாவின் தலையீடு அதிகமாக இருந்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.

சீன ஆராய்ச்சியாளர்கள்
இன்னும், சில நாட்களில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தோற்றம் குறித்த முழு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் விளக்கி செய்தியாளர்களைச் சந்தித்தனர். உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு வூஹான் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டபோது, அவர்களுடன் சீனா ஆராய்ச்சியாளர்களும் சென்றது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தோற்றம்
கொரோனா தொற்று எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து நான்கு வகையிலான முடிவுகள் முன் வைக்கப்பட்டது. வௌவால்களில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். வேறொரு விலங்கில் தோன்றிய கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட உணவுகளில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம். வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

ஆய்வு முடிவுகள்
ஆனால், இதில் கடைசி முடிவான வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற கூற்றைக் கிட்ட தட்ட அனைத்து உலக சுகாதார அமைப்பு வல்லுநர்களும் மறுத்துள்ளனர். முதல் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றர். இது குறித்த உலக சுகாதார அமைப்பின் 400 பக்கங்களைக் கொண்ட முழு ஆய்வு முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.