• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அபிராமி அபிராமி.. நீங்க எங்கியோ போயிட்டீங்க சார்.. அண்ணனுக்கு ஒரு நோபல் பார்சல்!

Google Oneindia Tamil News

சென்னை: உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல புகழ்பெற்ற இன்னொரு விநோத பரிசு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு பேர்தான் இக்நோபல் (Ig Nobel) பரிசு. ஆண்டுதோறும் பத்து விநோதமான கண்டுபிடிப்புகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

1991 முதல் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. Annals of Improbable Research என்ற அறிவியல் நகைச்சுவை இதழின் ஆசிரியரான மார்க் ஆப்ரஹாம் என்பவரின் மூளையில் உதித்ததுதான் இந்த விநோத ஐடியா. இதை எதோ நம்மூர் சாதாரண விருது வழங்கும் நிகழ்ச்சி மாதிரி நினைத்துவிடாதீர்கள். நோபல் பரிசைப் போன்றே இதற்கும் ஒரு வல்லுநர் குழு விண்ணப்பங்களை தீவிரமாக ஆராய்ந்து எடைபோட்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். தேர்வாகும் சாதனையாளர்களுக்கு உண்மையான நோபல் பரிசு பெற்றவர்களின் கைகளால் விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த விருது நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.

 do you know about ig nobel prize

சரி, இப்போ ஏன் திடீர்னு இதைப் பத்தி பேசனும் என்று கேட்கிறீர்களா? காரணம், இந்த ஆண்டுக்கான இக்நோபல் விருது அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு விருது வாங்கின ஒருத்தர் ஏடாகூடமான ஆராய்ச்சி ஒன்றை செய்திருக்கிறார். ஆண்மலட்டுத்தன்மை பற்றி ஆய்வு செய்துவந்த ரோஜர் மற்றும் போராஸ் என்ற இரு நிபுணர்கள், வில்லங்கமான பரிசோதனையை பிரான்சில் அரங்கேற்றி இருக்கிறார்கள். அதாவது ஆண்களின் விதைப்பையின் உஷ்ணம் எந்த அளவு இருக்கிறது என்பதை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காக 22 தபால்காரர்களை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்களின் விதைப்பையின் வெப்பநிலையை கணக்கிட்டிருக்கிறார்கள். அதேபோல அவர்கள் துணிகளை அணிந்துகொண்ட பிறகு வெப்பநிலையில் என்ன மாற்றம் வருகிறது என்பதையும் பார்த்திருக்கிறார்கள். இதேபோல பேருந்து ஓட்டுநர்கள் 11 பேரை உட்கார வைத்து இதே வேலையை பார்த்திருக்கிறார்கள்.

இதில் இருந்து இவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது துணி அணிந்திருக்கும்போது இடது பக்க விதைப்பை வலது பக்கத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் இவர்களின் கண்டுபிடிப்பு. மேற்கத்திய நாடுகளில் ஆண்களில் விந்தணுக்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது என்று பேசப்படும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் இக்நோபல் குழுவினர்.

பரிசு வென்றிருக்கும் இன்னொரு கண்டுபிடிப்பு உலகிலேயே கிருமிகள் நிறைந்த ரூபாய் நோட்டு எது என்பது பற்றியது. ரோமானியா நாட்டு கரன்சிதான் கிருமிகள் அதிகம் இருக்கும் நோட்டாம். டாலர், யூரோ, இந்திய ரூபாய் என பல்வேறு நாட்டு ரூபாய் நோட்டுகளின் மீது பாக்டீரியா கிருமிகளை விட்டு ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள். இதில் ரோமானியா நாட்டு கரன்சி மீதுதான் பாக்டீரியாக்களுக்கு பாசம் அதிகம் வந்து பச்சக்கென அதில் நன்றாக ஒட்டிக்கொள்கிறதாம். கள்ளநோட்டை தடுக்கவும், நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் என்பதற்காகவும் ரோமானிய நோட்டில் ஒருவித பாலிமர் ஃபைபர் சேர்க்கப்படுகிறது. இதுதான் கிருமிகள் அந்த நோட்டில் அதிகமாக இருப்பதற்கு காரணம் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 do you know about ig nobel prize

பீட்சா சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று கண்டுபிடித்து இக்நோபல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார் சில்வானோ காலஸ் என்ற ஆராய்ச்சியாளர். இத்தாலியில் உள்ள அறிவியல் லேப் ஒன்றின் தலைவரான இவர், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க பீட்சா சாப்பிடுவது பயன்படும் என்று கண்டுபிடித்திருக்கிறார். அதேசமயம் நான் சொல்றது இத்தாலியில் தயாரிக்கப்படும் பீட்சாவை பற்றி மட்டும்தான் என்று தெளிவுபடுத்தியும் இருக்கிறார். காரணம் அதில் சேர்க்கப்படும் மெடிட்டரேனியன் உணவுப்பொருட்கள் உடல்நலனிற்கு அத்தியாவசியமானவை என்கிறார் காலஸ்.

 do you know about ig nobel prize

ஈரான் நாட்டைச் சேர்ந்த இன்ஜினியர் இமான், குழந்தைகளுக்கு நேப்கின் மாற்றும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து இக்நோபல் பரிசை வென்றிருக்கிறார். அழும் குழந்தைக்கு நேப்கின் மாற்றுவது என்பது அத்தனை சாதாரண விஷயமா என்ன? இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தால் என்ன என்று தீவிரமாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார் இவர். இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பதிவு செய்து பேடண்ட் உரிமமும் பெற்றிவிட்டார். பல பெற்றோரின் முக்கிய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

 do you know about ig nobel prize

குட்டிக் குழந்தைகள் ஜொள்ளுவிட்டால் நாம் என்ன செய்வோம். துணி எடுத்து துடைத்துவிடுவோம். அந்த ஜொள்ளை வைத்தே இக்நோபல் வாங்கிவிட்டார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். அட ஆமாங்க, 5 வயது குழந்தைகளுக்கு எதையாவது சாப்பிடக் கொடுத்து, கொஞ்ச நேரத்தில் அதை குழந்தையை துப்பவும் வைத்து, அது துப்பியதல் எவ்வளவு எச்சில் இருக்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுக்கும் முன் அதன் எடை என்ன, குழந்தையின் வாயில் இருந்து வெளிவரும் போது அதன் எடை என்ன, இரண்டும் உள்ள வித்தியாசத்தை வைத்து குழந்தையின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவை கண்டறிகிறார்கள். இதன்படி பார்த்தால், 5 வயது குழந்தையின் வாயில் ஒருநாளைக்கு 500 மி.லிட்டர் எச்சில் சுரக்கிறதாம்.

இந்த கண்டுபிடிப்புகளால் நாட்டுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? நிறையவே இருக்கிறது என்கிறார்கள் இக்நோபல் குழுவினர். உதாரணத்திற்கு, 2006இல் மலேரியாவை பரப்பும் ஒரு வகை கொசுக்கள் (Anopheles gambiae) பற்றிய ஆய்வுக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆய்வின்படி இந்த வகை கொசுக்கள் Limburger cheese எனப்படும் பாலாடைக்கட்டியின் வாசனையால் ஈர்க்கப்படுகின்றன என்று தெரிய வந்திருக்கிறது. உடனே ஆப்ரிக்காவில் கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இந்த பாலாடைக்கட்டிகளை வைத்து கொசுக்களை ஒரே அமுக்காக அமுக்கி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அரிய கண்டுபிடிப்பினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல 2000ஆம் ஆண்டு காந்த சக்தியால் தவளை ஒன்றை ஆகாயத்தில் மிதக்க விட்டு இக்நோபல் வென்ற சர் ஆண்ட்ரே கிய்ம் என்ற ஆய்வாளர், தனது மற்றொரு ஆய்வுக்காக 2010ஆம் ஆண்டு நோபல் பரிசை தட்டிச்சென்றார். இதுவரை இக்நோபல், நோபல் என்ற இரண்டு பரிசுகளை வென்ற ஒரே ஆய்வாளர் இவர்தான்.

இக்நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியே பயங்கர கலாட்டாவாக இருக்கும். விருது நிகழ்ச்சியின்போது காகித ராக்கெட்டுகள் செய்து மேடையை நோக்கி வீசுவது நீண்டகாலமாக ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காகித ராக்கெட்டுகளை பல ஆண்டுகளாக Roy J. Glauber என்ற பேராசிரியர்தான் சுத்தம் செய்வார். ஆனால் 2005ஆம் ஆண்டு நடந்த விருது நிகழ்ச்சியில் மட்டும் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஏன் தெரியுமா? அந்த வருஷம் பௌதிகப் பிரிவில் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, அதை வாங்குவதற்காக அவர் சென்றுவிட்டார். அடப்பாவிகளா, ஒரு நோபல் பரிசு வாங்குற ஆளை குப்பை பொறுக்க விட்டுட்டீங்களே என்றே பலரும் வாயைப் பிளந்தார்கள்.

அதேபோல பரிசு பெற்ற அனைவரும் மேடையில் வந்து ஏற்புரை வழங்க வேண்டும். அதிக நேரம் பேசிக்கொண்டே போனால் மிஸ் ஸ்வீட்டி என்ற சின்ன பெண், "பேச்சை நிறுத்துங்க, எனக்கு போரடிக்குது" என்று கத்த ஆரம்பித்துவிடுவாள். அப்புறம் வேறு வழியில்லாமல் பேச்சாளர் உடனடியாக மேடையை விட்டு நடையை கட்டிவிட வேண்டும்.

"ஏதேனும் வித்தியாசமான யோசனையாக இருந்தால் மக்கள் முதலில் சிரிப்பார்கள், பின்னர்தான் அதைப் பற்றி சீரியஸாக சிந்திப்பார்கள்" என்கிறார்கள் இக்நோபல் குழுவினர். தெர்மாகோல் போட்டு அணையை மூடியதில் இருந்து சோப்பு போட்டு குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருகிறது என்று சொன்னது வரை நம்மூரிலும் நிறைய வில்லேஜ் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களையும் இக்நோபல் குழு இனி கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- கௌதம்

English summary
We all know about Nobel prize but do you know about IG nobel prize?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion